Breaking News

தனிமனித முடிவுகளை இனிமேல் அனுமதிக்கமுடியாது – மருத்துவர் லக்ஸ்மன்(காணொளி)

எமது மக்களின் அரசியல் வேட்கையும், பயணமும்
தனித்துவமானது. அது கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்திருந்தது. அது ஆரம்பம் தொட்டு எத்தையோ அழிவுகளுக்கும், விலைபேசல்களுக்கும் மத்தியிலும் கொள்கைகளின் வழியே நின்றிருந்தது.

அந்த பயணம் கடுமையானது என தெரிந்தும், எத்தனையோ ஆசைவார்த்தைகள் வீசப்பட்டும், அது கொள்கையை ஒருபோதும் விடுக்கொடுத்திருக்கவில்லை. காலத்துக்கு ஏற்ப அல்லது நடைமுறைக்கு ஏற்ப என்ற சொல்லாடல்களுடன் தனது வசதிகளுக்கு ஏற்ப வளைந்திருக்கவில்லை. அது தனது அடிப்படை கோட்பாடுகளை விட்டு அசைந்திருக்கவில்லை. 

மாறாக காலத்துக்கு ஏற்ப தனது வழிமுறைகளை மட்டுமே மாற்றிக்கொண்டது, செழுமைப்படுத்திக்கொண்டது. அவ்வாறு காலத்துக்கு காலம் மாற்றிகொள்ள இந்த கொள்கை ஒன்றும் சட்ட புத்தகங்களினதோ அரசியல் புத்தகங்களினதோ வரிகள் சொல்கின்ற வரைவிலக்கணங்களின் பிரகாரம் உருவாகியது அல்ல. அவை எமது வாழ்க்கை, எமது பட்டறிவு. எமது வாழ்கையை அழிவில் இருந்து காப்பற்றிக்கொள்ள, எமது இனம் தனது பட்டறிவின்பாற்பட்டு இயற்கை நீதிடின்படி வரித்துக்கொண்ட கோட்பாடுகளே அவை. 

எமது மக்களின் அரசியலானது கொள்கைகளுக்கு பின்னாலேயே அணிவகுத்ததே தவிர, ஒருபோதும் தனி மனிதர்களுக்கோ கட்சிகளுக்கோ சின்னங்களுக்கோ பின்னால் அள்ளுண்டு போனதோ இல்லை. எமது அடையாளத்தை சிததைத்து, எம்மை ஒடுக்க முற்பட்ட தரப்புகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்ததும் எமது மக்களின் இந்த கொள்கை பற்றுறுதிதான். எத்துணை விலைபேசல்களுக்கும் எமது மக்கள் அசைந்து கொடுக்கவில்லை. எத்துணை கொடுமைகளை கண்டபோதும் எமது மக்கள் தடம்மாறவில்லை. 

இது மக்களுக்கு எவ்வளவு புரிந்ததோ அதனைவிட மேலாக அரசியல் தலைவர்களுக்கும் புரிந்திருந்தது அதுவே அவர்களை தடம்மாற்றாது வைத்திருந்தது. எமது மக்களை ஒடுக்கவேண்டும் ஆயின் இந்த முனைப்பை எவ்வாறாயினும் சிதைக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. ஆனால் 2009 இருக்கு பின்னரான நிலைமை துரதிஸ்டவசமாக அவ்வாறு இருக்கவில்லை. எவை எவை எல்லாம் எம்மை வழிதவறி செல்லப்பண்ணும் என்று அவதானமாக இருந்தோமோ, அவை அவை எல்லாம் நவீன உலக ஒழுங்கு, களயதார்த்தம், ராஜதந்திரம் எனும் அழகிய சொல்லடல்களாய் எம்மை சூழத்தொடங்கின. 

அர்ப்பணிப்பான மக்கள் சிந்தனையும், செயற்பாடுமே அரசியலாக இருந்த எமது மண்ணில் போலிவார்த்தைகளும், மாலைசூடல்களுமே அரசியலாக பரிணமிக்கின்றதோ என்ற கவலை அனைவரிடமும் உண்டு. பதவி அரசியலுடன் பின்னிப்பிணைந்தது தான் தேர்தல் அரசியல். ஒரு செயற்பாட்டு அரசியலை உடைப்பதற்கு ஒடுக்குமுறையாளர்கள் யுக்திகளில் ஒன்று பதவிகளை வழங்குதல் ஆகும். தேர்தல் அரசியலை முறையாக கையாளமுடியாது, கொள்கை அரசியல் தடம்புரண்ட வரலாறுகள் ஏராளம் உள்ளன. இனியும் எமது மண்ணில் அத்தகையதொரு நிலைமை ஏற்படாது என நம்பிக்கை கொள்வோம். 

மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற மனப்பாங்கும் இப்படியான அரசியலை வலுப்படுத்திவிடுகின்றது. எமது இந்த தூரநின்று பார்க்கும் போக்கினால்தான் தேர்தல் நிறைவடைந்த கையுடன் எவ்வித பொறுப்பு கூறலுக்கான கடப்பாடும் அற்று, எமது மக்களின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு தங்களுடையதே, தங்களுடையது மட்டுமே என இவர்கள் கருத தலைப்படுகின்றனர். வாக்களித்த மக்களுக்கு வெளிப்படுத்தப்படாத மூடிய அறைகளுக்குள் நடைபெறும் உரையாடல்களும் தனிமனித முடிவுகளும் மட்டுமே எமது மக்களின் தலை எழுத்தை தீர்மானிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

இவ்வாறு அனுமதிப்பது எம் கண் எதிரே நடைபெறும் அநியாயங்களுக்கு துணைபோவதாகவே அமையும். உண்மையான மக்கள்நலன்சார் அரசியல் என்பது தேர்தல்களுடன் மட்டுமே முற்றுப்பெறுவது இல்லை. தேர்தல் அரசியலுக்கு அப்பாலான கலந்துரையாடல்களுக்கு கூடும் பரந்தளவிலான பங்குபற்றுதல்களின் ஊடாகவே சாத்தியமாகும். எமது மண்ணின் விடிவிற்கு அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு மக்கள் சமூக இயக்கமே தேவையே தவிர வெறும் உணர்வூட்டும் வெற்று தேர்தல் அரசியல் அல்ல. 

இப்படியான பதவி அரசியலை தவிர்த்து மக்கள் மயப்பட்ட சக்தியே எம் இனத்தின் விடிவைநோக்கி முன்கொண்டுசெல்லும். வரலாற்றுரீதியாக, அறிவுபூர்வமாக எமது சிக்கலை அணுகி, எமது இத்தனைகால இழப்பிற்கும் நியாயமான தீர்வொன்றை நோக்கி நகர்வதற்கு மக்கள் அனைவரும் கட்சிபேதமின்றி ஒன்றிணையவேண்டியது காலத்தின் கட்டாயம். இது வெறுமனையே கட்சிகளுக்கான அழைப்பு மட்டும் அல்ல எமது மக்கள் அனைவரையும் நோக்கியே ஒரு வேண்டுகை ஆகும். 

மாறி மாறி வந்த அரசுகள் எம்மை இராணுவ வன்முறைக்கு அப்பால் அபிவிருத்தி, பொருளாதார மேம்பாடு என்ற பெயரிலும் வேறு பல வழிமுறைககளினூடும் எம்மை ஒடுக்கமுற்றபட்டபோது அவர்களுக்கு துணை நின்றது இராணுவ இயந்திரம் மட்டுமல்ல திட்டமிட்ட குடியேற்றங்களூடும், பொருளாதார-பண்பாட்டு ஆக்கிரமிப்புக்களூடும் எமது தேசத்தின் அடிப்படைகளை அழித்துவிடுவதற்கு விஞ்ஞானரீதியிலான திட்டங்களை வரைந்துகொடுத்தவர்கள் அந்த தேசத்து கல்வியாளர்களும், துறைசார் புலமையாளர்களுமேயன்றி அரசியல்வாதிகள் மட்டுமல்ல. 


தர்மநெறியினின்று வழுவி ஒரு இனத்தை ஒடுக்கும் செயன்முறைக்கே அந்த தேசத்து மக்களும், புலமையாளர்களும் இவாறு பங்களிப்பு வழங்கியிருக்கின்றார்கள் என்றால் ஒடுக்கப்படும் மக்களின் சார்பில், ஒடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களாகிய எமது பங்கும் எந்தளவுக்கு இருந்திருக்கவேண்டும், இனி இருக்கவேண்டும் என நாங்கள் ஒவ்வொருவரும் எம்மை நாமே கேட்போம் ஆயின் சரியான பாதையை நோக்கி சிறு அடியைத்தானும் எடுத்துவைக்க ஆரம்பிக்கலாம். 

அப்படி உருப்பெற்ற முயற்சிதான் இது. எம்மைப் பொறுத்தவரை இன்றைய அரசியல் சூழ்நிலை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தைவிட மிக ஆபத்தானது. எமது அரசியல்வாதிகள் மக்களுக்கு உண்மையுடையவர்களாகவும், மக்கள் விழிப்பாகவும் இல்லாதுவிடின் எமது எதிர்காலத்தையே காவுகொண்டுவிடும் ஆபத்து உள்ளது. நுண்ணிய நகர்வுகளுக்கூடக நடைபெறும் அரசியல் காய்நகர்த்தல்கள், எமக்கான தீர்வுகள் எமது மக்களின் பிரசன்னம் இல்லாமலே உருவாக்கப்பட்டு, எமக்கு தரப்பட்டதாக பதியப்படும். 

இதனை மக்கள் ஏற்றார்கள் என்று கூறுவதற்கும், தயாரிப்புக்கள் நடைபெறலாம். மிகவேகமாக நடைபெறும் இவ்விதமான நகர்வுகள் எம்மை சூழ்வதை நாம் அறிந்திருக்கவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் நாம், எமது மக்கள் விழிப்பாக இல்லாவிடின் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்திக்கநேரிடும். இந்த சவாலை தனி நபர்களாகவோ அல்லது தனித்தனி அமைப்புகளாகவோ எதிர்கொள்ளமுடியும் என நாம் கருதவில்லை. மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் சக்திகள் அனைத்தும் ஒன்றுபடவேண்டும். 

அனைவரும் ஒன்றுபட்ட அரசியல்மயப்பட்ட ஒரு மக்கள் அமைப்பின் மூலமே இது சாத்தியம் ஆகும். எனவேதான் இங்கு கூடியிருக்கின்ற அனைவரும் எமது மக்களின் நலன்களை மட்டும் முன்னிறுத்தி, எமது மண்ணில் நிகழந்த தியாகங்களின் பெயரால் ஒன்றிணைந்து கொள்கைவழி செயலாற்றவேண்டும் என வேண்டுகின்றோம். தத்தமது அரசியல் ஆதாயங்களுக்கு அப்பால், இதுவரை மக்களின் நலன்களுக்காக தம்மை அர்ப்பணித்துள்ள அனைவருக்கும் நன்றிகூற நாம் கடமைப்பட்டுள்ளோம். அரசியல்மயப்பட்ட ஒரு மக்கள் இயக்கமாக இது பரிணமிக்கவேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். 

அதற்கான ஒரு முதற்படியாகத்தான் இந்த அமைப்பு இங்கு கூடி இருக்கின்றது. இதற்கான பணியை, ஒன்றிணைப்பை தமிழர் தாயகம் எங்கும் நாங்கள் முன்னெடுக்கவேண்டும். இதன் முதற்கட்ட பணியாக அரசியல்தீர்வு விடையத்தில் இன்றைய அரசியல் தலைமை, எமது போராட்ட இலக்குகளை சரியான திசையில் கொண்டுசெல்வதற்கும், அரசியல்தீர்வு ஒன்றின்மூலம் தமிழர்கள் எதிர்பார்ப்பது இதுதான் எனக்கூறும் நோக்கிலும் நாம் மக்கள் கலந்துரையாடல் மூலம் எமது அபிலாசகைளை ஒரு ஆவணமாக முன்வைக்கவேண்டியது அவசியமானதும், அவசரமானதுமான ஒரு தேவையாகும். 

அந்த ஆவணத்தை எழுதுவதற்கு ஒரு நிபுணர்குழுவை நாம் முதற்கண் நியமிக்கவேண்டும். அதன்பின்னர் அதனை மக்கள் கலந்துரையாடலுக்கு விடவேண்டும். அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று அவர்களின் விருப்பங்களையும் கொண்ட அவர்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கின்ற ஆவணமாக நாம் அதனை முன்வைக்கவேண்டும். அவ் ஆவணத்தின் அடிப்படையிலேயே எமது பிரதிநிதிகள் அரசியல் அமைப்பாக செயற்படவேண்டும் என வலியுறுத்தவேண்டும். இதனை செய்துமுடிப்பதற்கு இந்த அவை உருவாக்கவேண்டும். மிகவும் விரைவாகவும் அவதானமாகவும் நாம் செயற்படவேண்டும். 

அரசியல் தீர்வு விடையத்தில் மட்டுமன்றி எமது அடையாளத்தின் குறியீடுகளாக விளங்கும் மொழி, கலை, பண்பாடு, பொருளாதார கட்டமைப்பு ஆகியவற்றின் மேம்பாட்டிலும் பாதுகாப்பிலும் எமது செயற்பட்டு பரப்பு விரிவடைய வேண்டிய தேவை உள்ளது. எனவே இந்த சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இனத்தின் பெயரால், எமது தேசத்துக்கு செய்யப்பட்ட அர்ப்பணிப்புகளின் பெயரால் அடையாளமிழக்காது எமது தேசத்தில் வாழவேண்டிய எமது அடுத்த சந்ததியின் பெயராலும் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். 

மருத்துவர் 

பூ.லக்ஸ்மன் -தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ் மக்கள் பேரவை.

தொடர்புடைய செய்திகள்


உதயமானது தமிழ் மக்கள் பேரவை -காணொளி இணைப்பு(இரண்டாம் இணைப்பு )
தமிழ்மக்கள் பேரவை ஏன் முதலமைச்சர் விளக்கம்(காணொளி இணைப்பு)