Breaking News

முன்னாள் போராளிகள் வாழ்வாதாரத் திட்டத்துக்கான பதிவுகளை மேற்கொள்ளலாம்!

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சரின் திட்டத்துக்கு அமைவாக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் கடந்த ஆண்டு ஆரம்பித்த புனர்வாழ்வு பெற்ற போராளிகள், யுத்தத்தில் தமது பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் ஆகியோருக்கான வேலைத்திட்டமானது, கடந்த ஆண்டு சிறப்பான முறையிலே நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மீதமாக இன்னமும் தமது பதிவுகளை மேற்கொள்ளாமல் தவறவிட்ட நபர்களுக்காக இந்த ஆண்டும் தமது பதிவுகளை மேற்கொள்ள இப்போது விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்படி நபர்கள் தற்போது தத்தமது பிரதேச செயலகங்களில் இருக்கின்ற கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரிடமிருந்து விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும், அவ்வாறு படிவங்களை பெற்றவர்கள் சரியான முறையில் அதனை பூரணப்படுத்தி தம்மிடம் இருக்கின்ற தொடர்பான ஆவணங்களின் நிழல் பிரதியையும் இணைத்து தமது கிராமங்களில் இருக்கின்ற RDS அல்லது WRDS மற்றும் கிராம சேவையாளரிடமும் உறுதிப்படுத்தி இன்று வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக தமது கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.

அத்தோடு, ஒப்படைத்தமைக்கான பற்றுச் சீட்டையும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

எனவே கடந்த ஆண்டு தமது பதிவுகளை பதிவுசெய்யாது தவறியவர்கள் இந்த சந்தர்ப்பத்தை தவற விடாது விரைவாக தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறும் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.