Breaking News

வண்டில் மாடு போல கூட்டமைப்புக்கும் காது வெட்ட வேண்டுமா?

மாற்றங்களை விரும்பாத இனங்கள் என்றொரு
ஆய்வு செய்து பட்டியல் தயாரித்தால் ஈழத் தமிழினத்துக்கு நிச்சயம் முதலிடம் கிடைக்கும்.
அந்தளவுக்கு மாற்றங்களை நாம் விரும்பு வது மிகமிகக் குறைவு எனலாம். இதனால் சாதகம் என்பதை விட பாதகமே அதிகம் என்பதையும் இவ்விடத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, முன்பு எல்லாம் எங்கள் விவசாயச் செய்கையில் எருது மாடுகளின் பங்கு என்பது மிகச் கணிசமான இடத்தைக் கொண்டிருந்தது. உழவுத்தொழில் தொடக்கம் விவசாய உள்ளீடு மற்றும் வெளியீடுகளை ஏற்றி இறக்குதல் வரை அனைத்திலும் எருது மாடுகளே பங்கு கொண்டன.

இப்போது வண்டில்களையும் வண்டில் மாடுகளையும் காண்பது அரிதாகிவிட்டது என்பது தெரிந்த கதை. எருது மாடுகளின் உழைப்பு இருந்த போது வண்டில் இழுக்கின்ற எருது மாட்டின் இரண்டு செவிகளில் பெரும் பகுதியை வெட்டி விடுகின்ற ஒரு முறை உண்டு. எருது மாட்டிற்கு நன்மையாக அமையும் என்ற நோக்கிலேயே காதுகள் வெட்டப்படுகின்றனவாயினும் அதற்குள் இருக்கக் கூடிய மிருகவதை பற்றிய வாதங்கள் தனித்து ஆராயப்பட வேண்டியவை.
எருது மாடுகளின் காதுகளை வெட்டி விடுவதால் எருது மாட்டிற்கு என்ன நன்மை என்பதே இப்போது உங்களிடம் எழக்கூடிய கேள்வி.

பொதுவில் மாட்டு வண்டிலில் செல்பவர்கள் வண்டியின் ஓட்டத்தை வேகப்படுத்துவதற்காக ஒரு பெரிய தடியை வைத்திருப்பர். மாட்டிற்கு அடிக்கும் பொருட்டு தடியை ஓங்கும் பொழுது மாட்டின் கண்களைக் அவற்றின் காதுகள் மறைத்து விடுகின்றன.

எனவே, காதுகளை வெட்டி விடுவதன் மூலம் தடியை ஓங்குவதை கண்ட எருது மாடுகள் வேகமாகச் செல்லும். இதனால் மாட்டிற்கு அடி விழுவது தவிர்க்கப்படுகிறது. மாட்டின் ஆயுள்காலம் வரை அடி விழுவதை விட, செவிகளை வெட்டி மாட்டுக்கு அடி விழுவதை தடுப்பது நல்லது என்ற நிலையில்தான் எருது மாடுகளுக்கு காது வெட்டும் நடை முறை பின்பற்றப்பட்டன.

இத்தகைய நடைமுறைகளும் தேவையானவை என்பதை எவரும் அடியோடு நிராகரித்து விட முடியாது. இதன் காரணமாக தமிழ் மக்கள் சிலரை வேகப்படுத்த காதுகளை வெட்டி தடியை ஓங்கி ஓட வைப்பதற்கு முயற்சிக்கின்றனர். அந்த முயற்சியின் பயனாக எல்லோரும் தீர்வுத்திட்டம் தயாரிக்க தயாராகி விட்டனர்.

ஐயா! இவ்வளவு காலமும் எங்க போனவியள். இவ்வளவுகாலமும் இவையரின் சிந்தனை செழும் பேறிக் கிடந்ததா? என்ற கேள்விகள் எழுகின்றன வாயினும் காது வெட்டி கம்பை உயர்த்தினால் வேகம் எடுக்கும் என்ற உண்மையை பேரவைக்குள்ளால் அமுலாக்கிய தமிழ் மக்கள் மகாகெட்டிக்காரர்தான்.