Breaking News

யாழில் காணிகள் விடுவிப்பு : அமைச்சரவை அங்கீகாரம்



யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தொள்ளாயிரத்து நாற்பத்து எட்டு ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.

இராணுவத்தினர் வசமுள்ள குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள், நாட்டில் நல்லிணக்கத்தையும் நீடித்த சமாதானத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், அவர்களை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது அவசியமானதென, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ள நிலையில், அவர்களின் பரிந்துரையின் பிரகாரமே குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித மேலும் தெரிவித்தார்.