Breaking News

வடக்கு மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வது எமது பொறுப்பு

வட பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு பல தேவைகள் காணப்படுகின்றன. அவர்களுக்கான உதவிகளை உரிய முறையில் வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பட்டதாரி பயிலுனர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், சாரதிகள் ஆகியோருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கோப்பாய் கல்வியியற் கல்லூரி மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், வேலையில் இருக்கும் போது அரசியல் பேசுவதை பழக்கமாக்காதீர்கள். கட்டுப்பாடு அற்று கடமையில் ஈடுபடுவதை பழகி கொள்ளாதீர்கள் ஏனெனில் வட பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு பல தேவைகள் காணப்படுகின்றன. அவர்களுக்கான உதவிகளை நல்குவது எமது பொறுப்பாகும்.

உங்களை நாடி வரும் பொதுமக்களை சாதி, சமய ரீதியில் கையாளாது யாவரும் மனித இனத்தவர்கள் என்பதனை மனதில் இருந்து கடமையாற்றுங்கள். அரசியல் தலையீட்டின் கீழ் வேலை செய்வதை நிறுத்தி, சட்டத்திற்கு அமைவாக கடமையாற்றுங்கள்.

அரசியலால் மக்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை தடையின்றி அவர்களுக்கு வழங்க உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பும் அவசியமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.