Breaking News

வலி வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட வதை முகாமின் தடயங்களை இரவோடு இரவாக அழித்த இராணுவம்

இராணுவத்தினருக்கு வதை முகாம்களோ , சித்திரவதை முகாம்களோ நடாத்த வேண்டிய தேவை இல்லை என இலங்கை இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்திருந்த நிலையில் வலி.வடக்கு வீமன்காம் பகுதியில் வதைமுகாம்களினை ஒத்ததாகக் காணப்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டிருந்த வீடுகளின் சந்தேகத்திற்கிடமான தடையங்கள் யாவும் இரவோடு இரவாக அழித்தொழிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதி கடந்த 25 வருடகாலமாக இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த 29ம் திகதி முதல் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அதனை அடுத்து அப்பகுதிக்கு மக்கள் சென்ற போது அருகருகாக உள்ள இரு வீடுகள் வதைமுகாம்களாக இருந்ததற்கான தோற்றப்பாட்டினைக் கொண்டிருந்ததாக சந்தேகம் வெளியிட்டிருந்தனர். 

இந்நிலையில் குறித்த இரு வீட்டின் மேல் கூரையில் வேயப்பட்டு இருந்த முட்கம்பிகள் இராணுவத்தினரால் அகற்றப்பட்டு உள்ளன. வீட்டின் சுவர்களில் எழுதப்பட்டு இருந்த, சிங்கள எழுத்துக்கள் வர்ணம் பூசப்பட்டு மறைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் வீட்டினுள் காணப்பட்ட இராணுவத்தினரின் உடைகள் மற்றும் இராணுவத்தினரின் ஆவணங்கள் என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டு வீட்டுனுள் காணப்பட்ட இராணுவ தடயங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.