வடக்கு முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர முயற்சி. - சுரேஸ்
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த கட்சியொன்று நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத்தின் அனுமதியுடனேயே இந்த பிரேரணை கொண்டுவர முயற்சிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
வட மாகாண சபைத் தேர்தலில் அனைத்து கட்சிகளினதும் ஒப்புதலுடனேயே விக்னேஸ்வரன் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தனித்து ஒரு கட்சி முயற்சிப்பது ஏற்புடையதல்லவென இதன்போது சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மேலும், இவ்வாறான விடயங்களின்போது அனைத்து கட்சிகளுடனும் கலந்தாலோசிக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதன் பின்னர், வடக்கு முதல்வருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு முதல்வர் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தவே இவ்வாறான செயல்கள் இடம்பெற்று வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.








