Breaking News

இந்திய புலனாய்வாளர்கள் சுதந்திரமாக ஊடுருவும் நிலை ஏற்படும் – எச்சரிக்கிறார் விமல்

இந்தியாவின் அவசர நோயாளர் காவுவண்டிச் சேவைக்கு இலங்கையில் அனுமதி அளிக்கப்பட்டால், இந்தியாவின் புலனாய்வு முகவர் அமைப்பான ‘ரோ’வின் உளவாளிகள் சுதந்திரமாக இலங்கைக்குள் நடமாடும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் விமல் வீரவன்ச.

”முன்மொழியப்பட்டுள்ள நோயாளர் காவுவண்டிச் சேவைக்கு பெரும்பாலும் இந்தியாவுக்கு சார்பானவர்களே சேர்த்துக் கொள்ளப்படுவர்.இது நாடுமுழுவதும் செயற்படவுள்ளது. எனவே, ‘ரோ’ உளவாளிகளால், தாம் செயற்படும் பிரதேசங்களில் உள்ளவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து தரவுகளை உருவாக்க முடியும்.

உலகிலேயே இந்தியாவில் தான் மிகமோசமான சுகாதார சேவை காணப்படுகிறது. அங்கே தரமான நோயாளர் காவுவண்டிச் சேவையோ தரமான வீதிகளொ கிடையாது.

இப்படியான நிலையில், நோயாளர் காவுவண்டிச் சேவையை இலங்கையில் நடத்த அவர்களை அழைப்பது அபத்தமாகும்.இந்த நோயாளர் காவுவண்டிச் சேவையை சுகாதார அமைச்சினால் கட்டுப்படுத்த முடியாது.

இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக இலங்கையின் பொருளாதாரத்தை தாரை வார்க்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பதற்கு இது ஒரு ஆதாரம்.இதனை எதிர்ப்பவர்களுக்கு துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.