Breaking News

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து விரைவில் அறிவிக்காவிடின் போராட்டம் வெடிக்கும்



உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி வெளியிடத்தவறினால் பொதுமக்களை இணைத்து நாட்டிலுள்ள பிரதான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

ஹற்றன் – கினிகத்தேனை பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆயுட்காலம் நிறைவடைந்து, கலைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதியன்று வெளியிடுவதற்கு அரசாங்கம் தவறினால் அதற்கெதிராக பொதுமக்களை திரட்டி நாடுமுழுவதும் பிரதான வீதிகளை இடைமறித்து ஆர்ப்பாட்டங்களை நடத்த எதிர்பார்த்திருக்கின்றோம்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற வகையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்ற எத்தணிக்கும் சட்டமூலங்களையும், பிரேரணைகளையும் தோற்கடிக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.