Breaking News

காணி­களை விடு­விக்க வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ரதப் போராட்டம்


வலி­காமம் வடக்கில் உயர் பாது­காப்பு வல­யத்­திற்குள் உள்­ள­டங்கும் அனைத்து காணி­க­ளையும் விடு­விக்க வலி­யு­றுத்தி 32 நலன்­புரி முகாம்­களை சேர்ந்த மக்­களும் உண்­ணா­வி­ரத போராட்­டத்தில் ஈடு­பட தீர்மா­னித்­துள்­ள­தாக நலன்­புரி நிலை­யங்­களின் தலைமை நிர்­வா­கத்­தினர் தெரி­வித்­துள்­ளனர். நேற்­றைய தினம் யாழ்.சுன்­னாகம் சபா­ப­திப்­பிள்ளை நலன்­புரி நிலை­யத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர்கள் இதனை குறிப்பிட்டனர்.

செய்தியாளர் மாநாட்டில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

ஜனா­தி­பதி கடந்த டிசம்பர் மாதம் யாழ்ப்­பா­ணத்­திற்கு வரு­கை­தந்த போது, ஆறு மாத காலத்­திற்குள் இடம்­பெ­யர்ந்து முகாம்­களில் தங்­கி­யுள்ள அனைத்து மக்­க­ளு­டைய பிரச்­ச­னைகளும் தீர்க்­கப்­படும் எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

இதன் பின்னர் அர­சாங்கத் தரப்­பி­லி­ருந்து எமது பிரச்­சி­னைகள் தொடர்பில் வெளி­யாகும் செய்­திகள் எமது நம்பிக்கையை சீர்குலைத்துள்ளனர். குறிப்­பாக பாது­காப்பு செய­லளர் தெரி­வித்த கருத்­துக்கள் எமக்கு ஜனா­தி­ப­தியின் கருத்­தின்­மீது இருந்த நம்­பிக்­கையை கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ளது.

இந்­நி­லையில் தான் நாங்கள் அகிம்சை வழி போராட்டம் ஒன்றை ஆரம்­பிப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம். இத் தீர்­மா­ன­மா­னது 32 நலன்­புரி நிலை­யங்­க­ளையும் ஒன்­றி­ணைத்து மேற்­கொள்­வ­தா­கவே அமைந்துள்ளது. எமது அகிம்சை வழி­யான போராட்டம் எவ­ருக்கும் அசௌ­க­ரி­யத்தைக் கொடுக்­காது இருந்த இடத்­தி­லி­ருந்தே உண்­ணா­வி­ரத்தில் ஈடு­ப­ட­வுள்ளோம்.

அதற்­க­மைய உண்­ணா­வி­ரதப் போராட்டம் எதிர் வரும் 4 ஆம்­தி­கதி வெள்­ளிக்­கி­ழமை கண்­ணகி நலன்­புரி முகாமில் இருந்து ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அதனைத் தொடர்ந்து ஒவ்­வொரு கிழ­மையும் ஒவ்­வொரு நலன்­புரி முகாமில் உண்­ணா­விரப் போராட்டம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

இதே­வேளை எமது காணி­களில் மேற்­கொள்­ள­வுள்ள விமா­ன­நி­லைய விஸ்­த­ரிப்பு மற்றும் துறை­முக விஸ்­த­ரிப்­பு­களில் இந்­தி­யாவின் தலை­யீடே அதி­க­மா­க­வுள்­ளதை நாம் உணர்­கின்றோம்.

எனவே நலன்­புரி முகாமில் சொல்­லொணா துன்­பத்தை அனு­ப­வித்து வரும் எமது வாழ்­வியல் விட­யத்தில் இந்­தியா சிந்­தித்து செயற்­பட வேண்டும். குறிப்­பாக 26 வரு­ட­கால எமது பிரச்­சி­னைகள் தொடர்­பாக இந்­திய மத்­திய அர­சி­லி­ருந்து மாகாண அரசு வரை பேசு­கின்­றார்கள். இவ்­வாறு இருக்­கையில் மக்­க­ளு­டைய கருத்­துக்­க­ளுக்கும் உரி­மை­க­ளுக்கும் மதி­ப்ப­ளிக்­கின்ற ஜன­நா­யக நாடான இந்­தியா எமது நிலங்­களை ஆக்­கி­ர­மித்து எமது நிலங்­களில் இடம்பெறுகின்ற அபி­வி­ருத்­தி­க­ளில் முத­லிடு செய்­வ­தென்­பது ஏற்­கத்­தக்க செய­லல்ல.

மேலும் சர்­வ­தே­ச­மா­னது எங்­க­ளுக்கு தெளி­வான ஒரு தீர்வை தரு­மென நாங்கள் நம்­பி­யி­ருந்தோம். சர்­வ­தேச தலை­வர்கள் ஒவ்­வொ­ரு­வரும் இங்கு வரும் போது நீங்கள் உங்கள் இடங்­க­ளுக்கு செல்­வ­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் நாங்கள் எடுத்து வரு­கின்றோம். அது தொடர்­பாக நாம் இலங்கை அர­சாங்கத் தலை­வர்­க­ளோடு பேசி வரு­கின்றோம் என தெரி­வத்­தனர். இருந்த போதிலும் யாராலும் எமது பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வை வழங்க முடியவில்லை.

எனவே சர்­வ­தேசம் என்ன சொன்­னாலும் யார் வந்து போனாலும் நாம் எமது ஜனா­தி­ப­தி­யையே நம்­பு­கின்றோம். அவ­ருக்கு தான் எம்மை சொந்த இடத்தில் குடி­ய­மர்த்­து­வ­தற்கும் எமது காணி­களை மீளக்­கை­ய­ளிப்­ப­தற்கும் உரி­மை­யுண்டு. எனவே அவர் கூறி­யது போல ஆறு மாதங்களுக்கு எமக்கு தீர்வு வழங்­கப்­பட வேண்டும். ஜனா­தி­ப­தி­யோடு இணைந்து நாம் விழிப்­பாக இருக்­கின்றோம் என்­பதை புலப்­ப­டுத்­தவே நாம் இப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்ளோம்.

எமது போராட்­ட­மா­னது எந்­த­வித கட்சி சார்­பு­மற்ற போராட்­ட­மா­ன­தாகும். எனவே போராட்டத்திற்கு அனைத்து கட்சிகள், பொது அமைப்புக்கள், பல்கலைகழக மாணவர்கள், பொது மக்கள் என பலதரப்பினரும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் எம்மால் மேற்கொள்ளப்படும் உண்ணாவிர போராட்டத்திற்கு சரியான பதில் கிடைக்கப்பெறாவிட்டால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது நிலப்பகுதியாலும் நீர்பகுதியாலும் வெள்ளைக்கொடியோடு ஊடுருவுவோம் எனத் தெரிவித்தனர்.