Breaking News

தாஜுதீன் கொலை விவகாரம் -முக்கிய அதிகாரிகள் விரைவில் கைது

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய, இலங்கை காவல்துறையின் உயர் அதிகாரிகள், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்டோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவுள்ளனர்.

முன்னைய அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்த,பிரதி காவல்துறை மா அதிபரும் இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த மூத்த காவல்துறை அதிகாரிக்கு இந்தக் கொலையுடன் நேரடித் தொடர்பு இருக்கவில்லை என்றும், இந்தக் கொலையைச் செய்த குற்றவாளிகளுக்கு அவர் உதவி செய்தது குறித்த சான்றுகள் கிடைத்திருப்பதாகவும், காவல்துறை திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவரும், இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்படவுள்ளார்.தாஜுதீன் கொலையை விபத்து மரணம் என்று பதிவேடுகளில் குறிப்பிடுவதற்கு இந்த அதிகாரியே கருவியாக இருந்துள்ளதார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முக்கியமான பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த இரண்டு பேரும் சந்தேக நபர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.அவர்களில் ஒருவர் கப்டன் திஸ்ஸ என்று காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கொலை நடந்த போது கப்டன் திஸ்ஸ கொழும்பில் இருந்தார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரது தொலைபேசி உரையாடல்கள் கவனமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலையுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அனைவரும், வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லமுடியாதபடி, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.சந்தேக நபர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கைது செய்யப்படுவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.