மஹிந்த அணியினருக்கு எதிராக விரைவில் ஆர்ப்பாட்டம்
நாட்டின் சகல தொழிற்றுறைகளிலும் தமது ஆதரவாளர்களை நிலைகொள்ளச் செய்துள்ள மஹிந்த அணியினர் தற்போது எல்லாத் தொழில் துறைகளினுள்ளும் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். சர்வதேச மட்டத்தில் யுத்தக் குற்றவாளிகளாகிவிட்டனர்.எனவே மஹிந்த அணியில் உள்ள 30 பேரும் இளைஞர்களை இனவாதிகளாக்கி இவர்கள் ஊடாக தம்மை பாதுகாத்துக்கொள்ள முற்படுகின்றனர். மக்களை ஒன்று திரட்டி விரைவில் அவர்களின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போமென நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
மஹிந்த அணியினர் கொழும்பில் நடத்திய கூட்டம் குறித்து ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் ஜனநாயகத்திற்கு முரணாக ஆட்சி செய்த மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட முப்பது பேர் அடங்கிய குழு தற்போது நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தி பல்வேறு நாசகார செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மஹிந்தவின் ஆதரவாளர் குழுக்களில் சிலர் நாட்டின் சகல தொழிற்றுறைகளிலும் சேவையில் அமர்த்தப்பட்டனர். இவர்கள் தான் நாட்டில் ஏற்படும் மின்வெட்டு, துப்பாக்கிச் சூடு, இனவாதம் தூண் டல் உள்ளிட்ட நாசகார செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் என்பது விரைவில் வெளிச்சமாகும்.
இவர்கள் கடந்த அரசாங்கத்தில் இருந்த போது அதிகார போக்கில் யுத்த க்குற்றங்களில் ஈடுபட்டமை தற்போது சர்வதேச அரங்கிலும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் ஊடாகவும் படிப்படியாக வெளிச்சத்திற்கு வருகின்றன.
இந்நிலையில் இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பி தண்டிக்கப் போகின்றனர் என்ற எண்ணக்கருவை அவர்கள் மத்தியில் உருவாக்கி அவர்களை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படச் செய்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இராணுவத்தை மட்டுமல்லாது இளைஞரிடத்தில் இனவாதம் பாடி அவர்களின் மனதிலும் ஆழமாக இனவாதத்தை விதைக்க முற்படுகின்றனர். இவ்வாறு இளைஞர் மத்தியில் இனவாத குழுவொன்றை தோற்றுவித்து அதன் மூலம் இன்று சர்வதேச மட்டத்தில் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ள மஹிந்த உட்பட 30 பேரையும் காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
இவர்களின் அட்டகாசங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கு வெகுவிரைவில் முற்றுப்புள்ளி வைக்க நாம் தீர்மானித்துள்ளோம் அரசியல் சக்திகளை விட மக்கள் பலம் போதும் என்ற விதத்தில் நவ சமசமாஜ கட்சி, மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகிய ஏனைய தரப்புக்கள் தொழிற் சங்கங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார்.








