இனவாதத்தை முறியடித்து அரசியல் தீர்வை முன்வைப்போம்!
தமிழ் மக்களின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இருக்கின்றமையே தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கையை எமக்கு ஏற்படுத்தியுள்ளது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
தற்போது கிடைத்துள்ள சிறந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிரந்தர அரசியல் தீர்வைக் காணாவிடின் தமிழ் மற்றும் சிங்கள மக்களின் எதிர்காலம் இருண்டுவிடும். எனவே இதனை புரிந்துகொண்டு அனைவரும் செயற்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகளையும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளையும் குழப்புவதற்கு சிலர் முயற்சிப்பதை நாங்கள் காண்கின்றோம். ஆனால் மக்கள் அந்தத் தரப்பினருக்கு இடமளிக்கமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்குமா என வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகளை குழப்பி இனவாதத்தை பரப்புவதற்கு சில தரப்பினர் பாரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பதை நாங்கள் அறிகின்றோம். ஆனால் கொழும்பில் நடத்தப்பட்ட ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதனை நாங்கள் சவாலாகவே எடுக்கவில்லை.
நடைபெற்று முடிந்த இரண்டு பிரதான தேர்தல்களில் இந்த நாட்டில் இனவாதம் நிராகரிக்கப்பட்டது. இனவாதத் தரப்புக்களை மக்கள் மிகவும் தெ ளிவான முறையில் நிராகரித்திருந்தனர். இனவாதிகள் தோல்வியடைந்தனர். ஆனால் அவ்வாறு தோல்வியடைந்த தரப்பினர் தற்போது 4000 அல்லது 5000 பேரை இணைத்துக் கொண்டு கொழும்பில் கூட்டம் நடத்துவது ஒரு விடயமே அல்ல.
என்னால் வேண்டுமானாலும் தனித்து 5000 பேரை அழைத்துக் கொண்டு கூட்டம் நடத்த முடியும். எனவே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்தை நாம் சவாலாக எடுக்க வேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமன்றி இவ்வாறு கூட்டங்களை நடத்துவதன் மூலம் ஒருநாளும் ஆட்சியை கைப்பற்ற முடியாது. ஆட்சியை கைப்பற்றுவதற்கு தேர்தல் நடைபெற்றே ஆக வேண்டும்.
மஹிந்த ராஜப்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாங்களும் கொழும்பில் 50000 பேரைக் கொண்டு கூட்டங்களை நடத்தியிருந்தோம். ஆனால் அவ்வாறு கூட்டங்களை நடத்துவதன் மூலம் உடனடியாக ஆட்சியை கைப்பற்ற முடியாது என எங்களுக்கு தெரியும். எனவே மஹிந்த தரப்பினர் 4000 பேரைக் கொண்டு நடத்திய கூட்டம் தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை.
இது இவ்வாறிருக்க தற்போது நாட்டில் இனவாதத்தை பரப்புவதற்கு பலர் முயற்சிக்கின்றனர். எவ்வாறான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்படாது.
இது தொடர்பில் நாங்கள் சர்வதேசத்தையும் சிறந்த முறையில் தெ ளிவுபடுத்தி வருகின்றோம். குறிப்பாக புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு நாங்கள் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம். அந்த புதிய அரசியலமைப்பினூடாக தமிழ்பேசும் மக்களின் இனப் பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை காண முடியமென நாங்கள் நம்புகின்றோம்.
இந்த நம்பிக்கையை தமிழ் மக்களும் எம்மீது வைக்கவேண்டும். இனவாத தரப்புக்களின் முயற்சிகளை நிராகரித்து மிகவும் பொறுமையாக செயற்பட்டு நாம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வோம் என்பது குறித்து தற்போது நாம் கூறிக் கொண்டிருக்க முடியாது. தேவையான நேரத்தில் அவசியமான திட்டங்களை நாங்கள் வெளிப்படுத்துவோம்.
விசேடமாக தமிழ் மக்களின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் இருக்கின்றமையே தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கையை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. காரணம் அவர் சிரேஷ்ட மூத்த அரசியல்வாதியாக இருக்கின்றார். அவரின் ஆரோக்கியமான பங்களிப்புடன் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணமுடியும் என்பது எமது நம்பிக்கையாகும்.
இதேவேளை இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நல்லாட்சியை உருவாக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் சந்தர்ப்பத்தை தவற விடாது தேசியப் பிரச்சினைக்கு தீர்வைக் கண்டுவிடுவதற்க முயற்சிக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டோமானால் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு எதிர்காலம் என்பது இருள் மயமானதாக மாறிவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது.
நாம் எந்தவொரு இனவாதத் தரப்பிற்கும் அடிபணியாது நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்போம். இவற்றைக் குழப்புவதற்கு முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளுக்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.








