Breaking News

யுத்தக் குற்ற விசாரணை வேண்டும் - ரெலோ மாநாட்டில் தீர்மானம்

இனப் பிரச்சினைக்கான தீர்வு, யுத்த குற்ற விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை, முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நேற்றும் நேற்று முன்தினமும் நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் 9ஆவது மாநாட்டில் இத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வடக்கு – கிழக்கு இணைப்பையும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையும் வலியுறுத்துவதாக அமையும் இந்தத் தீர்மானங்கள் தொடர்பான அறிக்கையை, கட்சியின் பிரதித் தலைவர் ஹென்றி மஹேந்திரன் நேற்று (திங்கட்கிழமை) மாலை வெளியிட்டார்.

அந்தத் தீர்மானங்களில், வடக்கு – கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கியதாக சுயாதீன நிர்வாக அலகு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும், மலையகத்திலும் சுயாட்சி பிரதேசங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் உடனடியாக நீக்க வேண்டும் எனவும், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் 10 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் எனவும் புனர்வாழ்வு பெற விரும்புபவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் துரிதமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனவும் அரசியல் கைதிகள் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை கூறுகின்றது

இதேவேளை, யுத்தக் குற்றம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சர்வதேச பங்களிப்புடனான நீதி விசாரணைக்கு ஏதுவான நடவடிக்கைகளை, இலங்கை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென, இம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றுமொரு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.