Breaking News

முன்னாள் போராளிகளை ஏமாற்றும் அதிகாரிகள்

புனர்வாழ்வு பெற்று 3 வருடங்கள் கடந்தும் இதுவரையும் எந்தவிதமான உதவிகளும் செய்துகொடுக்கப்படவில்லை என புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் கவலை தெரிவித்தார்.

அம்பாறை - திருக்கோயில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு சென்ற மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலரை நேற்று திங்கட்கிழமை சந்தித்தார்.

திருக்கோயில் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மீள்குடியேற்ற அமைச்சரை சந்தித்த முன்னாள் போராளி ஒருவர், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இவ்வாறு குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்து, 2012 ஆம் ஆண்டு 9 ஆம் மாதம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தனது சொந்த ஊருக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தன்னை விடுதலை செய்யும்போது ஒரு விண்ணப்பமொன்று தந்து அனுப்பியதாகவும் அதனை நிரப்பி உங்களது பிரதேச செயலகத்தில் கொடுத்தால் பணம் தருவார்கள் என்றும், ஆனால் 3 வருடங்களாகியும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

தங்களை அம்பாறைக்கு வருமாறு கூறியதாகவும் தாங்கள் 5 தடவைகளுக்கு மேல் போயிருப்பதாகவும் அங்கு போனதும் மீண்டும் ஒரு விண்ணப்பம் தந்து 8 மணியிலிருந்து 5 மணிவரை வகுப்பெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர் வீடு தருவதாக கூறியதாகவும், சொந்தமாக காணி தேவை என்றார்கள், அதனை எமது உறவுகளிடம் பணம் பெற்று காணித் துண்டொன்றை வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

காணி வாங்கி 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரையும் வீடு கொடுக்கவில்லை எனவும் இப்போது அந்த காணியை விற்று கடன் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளி கவலை தெரிவித்தார்.

இதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் பதிலளிக்கையில், 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெறுவதற்கு கொழும்பிற்கு வாருங்கள் எனக்கூறி தனது கருத்தைக் கூறி முடித்துக்கொண்டார்.இதேபோன்று அங்கு வந்திருந்த ஏனைய போராளிகளும் தங்களது நிலைமைகள் தொடர்பாக விசனம் வெளியிட்டதுடன், எதற்கும் முடிவு காணப்படாமல் தங்களது வாழ்வாதாரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.