Breaking News

மைத்திரியுடன் படத்தில் காணப்பட்ட என் மகள் எங்கே? தாய் கேள்வி

‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார சுவரொட்டியில் எனது மகள் காணப்பட்டாள். அவள் இப்போது எங்கிருக்கின்றாள் என்பதையாவது எனக்கு காட்டுங்கள்’ என காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தாயார் சாட்சியமளித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (புதன்கிழமை) காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் அங்கு சாட்சியமளித்த காசிப்பிள்ளை வனஜா என்ற தாய்யொருவர் ஆணைக்குழுவிடம் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார். தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,

‘நாம் வவுனியா வடக்கில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பல இடங்களுக்கு சென்றோம். தரப்பாள் கொட்டகைகளுக்கு கீழ் பதுங்குகுழி அமைத்து நாம் வாழ்ந்து வந்த போது, செல் தாக்குதலின் காரணமாக ஒரே இடத்தில் வசிக்க முடியாமையால் குடும்பத்துடன் ஓடினோம்.

அப்போது இரட்டைவாய்க்கால் பகுதியில் இராணுவ சீருடை அணிந்து வந்த ஆயுதம் தரித்த இளைஞர் குழுவொன்று இளம் பிள்ளைகளை பிடித்தார்கள். அவர்கள் யார் என்பதனை என்னால் ஊகிக்க முடியவில்லை.

அப்போது நான் எனது மகளான காசிப்பிளை ஜெரோமியை அணைத்து பிடித்திருந்தபோது என்னை தாக்கிவிட்டு எனது பிள்ளையை அவர்கள் பிடித்து சென்றார்கள். அங்கு எனது பிள்ளை மாத்திரமன்றி பல இளம் வயதினரை அவர்கள் பிடித்து வாகனத்தில் எற்றிச் சொன்றார்கள்.

அப்பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் இராணுவம் அப்பகுதியில் முன்னேறிக்கொண்டிருந்தது. இவ்வேளையில் நான் விடுதலைப் புலிகளிடம் எனது மகளை பிடித்தீர்களா? என கேட்டிருந்தேன். ஆனால் அவர்கள் இல்லை என்று தெரிவித்தனர். இந்நிலையில் நாம் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்து வவுனியா இராமநாதன் முகாமுக்கு வந்து சேர்ந்தோம்.

இதன்போது எனது மகள் காணாமல் போனோர் பதிவிலேயே பதிவு செய்யப்பட்டு வந்தார். இவ்வாறான நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் பிரசார சுவரொட்டியில் எனது மகளின் புகைப்படம் மைத்திரியுடன் வந்திருந்ததை அவதானித்தேன்.

அதன் பின்னர் மகள் எங்கோ இருக்கிறாள் என்ற எண்ணததில் தேடினேன். ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்தபோதும் நான் அவரிடம் படத்தை காட்டி கேட்டேன். அவர் அப்படத்தை தனது மடியில் வைத்து பார்த்து விட்டு தடுமாறிவிட்டார். கடந்த 8ஆம் மாதம் நான் அவரை சந்தித்தபோது காணாமல் போனோர் தொடர்பாக தான் எதனையும் கூற முடியாது. எனினும் இது தொடர்பாக விசாரணை செய்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. மகளை என்னுடன் விடாவிட்டாலும் பரவாயில்லை மகள் எங்குள்ளாள் என்பதனையாவது காட்டுங்கள் என அவர் ஆனைக்குழுவிடம் மன்றாடினார்.

இந் நிலையில் ஆணைக்குழுவின் தலைவர் மெஸ்வல் பரணகம சுவரொட்டி மற்றும் மேலதிக ஆவணங்களை பார்வையிட்டதன் பின்னர் அதன் பிரதிகளை காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யவுள்ள ஓய்வுபெற்ற மேல் நீதிபதி அடங்கிய குழுவிடம் கையளிப்பதாகவும் அவர்கள் விசாரணைகைள முன்னெடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.