Breaking News

முன்னாள் சபாநயாகர் எம். எச். முஹம்மட் காலமானார்

மூத்த முஸ்லிம் அரசியல் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான எம். எச். முஹம்மட் தனது 95அவது வயத்தில் காலமானார்.

கடந்த சில நாட்களாக கடுமையாக சுகயீனத்தால் பாதிக்கப்பட்டிருத இவர் இன்று காலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.அன்னாரின் ஜனாஸா இன்று பிற்பகல் 3:30 மணியளவில் குப்பியாவத்தையில் நடைபெறவுள்ளது.

1921 ஆம் ஆண்டு மாளிகாவத்தையில் பிறந்த எம்.எச். முஹம்மட், 1956ம் ஆண்டு கொழும்பு மாநகர சபையினூடாக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பின்னர் கொழும்பு மேயர், பொரளைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் , சபாநாயகர் என்று பல பதவிகளை வகித்தார்.கொழும்பின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்புகளை வழங்கியுள்ள அவர், முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான சேவைகளை ஆற்றியுள்ளார்.

அத்துடன் கொழும்பு இஸ்லாமிய நிலையத்தின் ஆயுட்காலத் தலைவரான எம். எச். முஹம்மட், அதனூடாக கொழும்பின் ஏழை மக்களுக்கு மருத்துவம், சுயதொழில் வாய்ப்பு என்று எண்ணற்ற சேவைகளை அளித்துள்ளார்.

2006ம் ஆண்டில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளர் கரு ஜயசூரிய தலைமையில் எம்.எச். முஹம்மட்டும் மஹிந்தவின் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டார். இதன்போது அவருக்கு மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டது.

கடந்த 2010ம் ஆண்டு தொடக்கம் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற எம்.எச்.முஹம்மட், சமூக சேவை விடயங்களை தொடர்ந்து முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.