வைகோவிற்கு எதிராக கிளம்பும் சர்ச்சைகள்
சென்னையில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ, தே.மு.தி.க.வில் இருக்கும் பொறுப்பாளர்களை இழுக்க தி.மு.க. முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
இதைப்போன்ற பிழைப்பைவிட வேறு ஏதாவது தொழிலை செய்து அவர்கள் பிழைத்துக் கொள்ளலாம் என தெரிவித்த அவர், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நாதஸ்வரம் வாசிக்கும் கலை தெரியும் என்றும் குறிப்பிட்டார். இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு முழுவதும் வைகோவின் கொடும்பாவிகளை எரித்து தி.மு.க. தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், கருணாநிதி தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக வருத்தப்படுவதாக தெரிவித்திருந்த வைகோ, அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், கருணாநிதியை தொடர்புப்படுத்தி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் சமீபத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கு இசை வேளாளர் முற்போக்கு நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இசை வேளாளர் முற்போக்கு நலச் சங்கத்தின் தலைவர் நாகைய்யன் மற்றும் பொதுச் செயலாளர் சுந்தரம் ஆகியோர் வைகோவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘வைகோவின் இந்த கருத்து தி.மு.க.வை மட்டுமல்லாமல் இசை வேளாளர் சமுதாயத்தையே இழிவுப்படுத்தி விட்டது. இதுபோன்ற தரக்குறைவான கருத்துகளை வெளியிடுவதும், பின்னர் மன்னிப்பு கேட்பதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல.
இனியும், எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளை அவர் வெளியிட்டால் பொதுமக்களின் ஆதரவை திரட்டி, வைகோ வீட்டின் முன்னே இசை வேளாளர் முற்போக்கு நலச் சங்கத்தை சேர்ந்த நாங்கள் போராட்டம் நடத்துவோம். இதுதொடர்பாக, நேற்று நடந்த எங்கள் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம்’ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.








