Breaking News

மைத்திரி அரசில் இணைய மஹிந்த இணக்கம்!



ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான பொது எதிரணியினர் மீண்டும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இதற்காக மஹிந்த தரப்பால் சில யோசனைகளும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர்  தெரிவித்துள்ளார்

ஸ்ரீலங்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வெற்றிபெற்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்ததை அடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்துக்கொண்டு எதிர்கட்சியாக செயற்பட்டு வருகின்றனர். 

அதேவேளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்ததுடன் தனியாக பிரிந்துசென்று புதிய கட்சியொன்றையும் உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர். 

எனினும் கடந்த மே முதலாம் திகதி இடம்பெற்ற மேதினக் கூட்டத்தை அடுத்து புதிய கட்சியை உருவாக்கும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய விருப்பம் வெளியிட்டுள்ளனர். 

இந்தத் தகவலை மஹிந்தவிற்கும் – மைத்ரிபாலவிற்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் கடும் பிரயத்தனங்களில் ஆரம்பம் முதல் ஈடுபட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊடாக மஹிந்த தரப்பு தெரியப்படுத்தியுள்ளது. 

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து உருவாக்கியுள்ள தேசிய அரசாங்கத்திலும் இணைந்துகொள்ளவும் விரும்பம் தெரிவித்துள்ளதாக பெயரைக் குறிப்பிட விரும்பாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதைய தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளே நடைமுறைப்படுத்தப்படுவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள மஹிந்த தரப்பு அதற்காக சில யோசனைகளையும் முன்வைத்துள்ளனர். 

இதில் சீனாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொண்டு பொருளாதார அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் படையினர் தொடர்புபட்ட விடையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் உட்பட முக்கியமாக பத்து யோசனைகளை மஹிந்த அணி முன்வைத்துள்ளது. 

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்களுக்காக சிறை வைக்கப்பட்டுள்ள படையினரை விடுதலை செய்வதுடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்றும் யோசனை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முழுமையாக புறக்கணிப்பதுடன், யுத்தத்துடன் நேரடியாக தொடர்படாத மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக உள்நாட்டு விசாரணைக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் மஹிந்த அணியினர் வலியுறுத்தியுள்ளனர். 

தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுதிட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் அதேவேளை 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை முழமையாக பகிரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினரால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.