Breaking News

இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்ந்தும் பலமான நிலையில் உள்ளது-ஜனாதிபதி



இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்ந்தும் பலமான நிலையில் உள்ளதுடன், எந்தவகையிலும் அது வலுவிழந்து காணப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி, நகோயா நகரில் அந்த நாட்டில் வாழ்ந்து வரும் இலங்கைப் பிரஜைகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.

சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளினால் முன்னெடுக்கப்படும் உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களால் ஏமாற்றமடைய வேண்டாமெனவும் இதன்போது ஜனாதிபதி கேட்டுள்ளார்.

தாய்நாட்டின் மீது கரிசனையுடன் பார்வையை செலுத்தி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பை நல்குமாறும் ஜனாதிபதி ஜப்பானில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கு சில சர்வதேச நாடுகள் முன்னர் மறுப்பு தெரிவித்திருந்ததாகவும், இப்பொழுது நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்க உலக நாடுகள் முன்வந்துள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதி நினைவூட்டினார்.

பாதுகாப்புப் படைகளை அரசாங்கம் காட்டிக்கொடுப்பதாக சில இணையத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்களை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் வாழ் இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புகளை உரியவாறு நிறைவேற்றாமையால், தற்போதைய அரசாங்கமே சர்வதேசத்திற்கு பதிலளிக்க வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

ஜப்பான், வியட்நாம், கொரியா போன்ற நாடுகள் யுத்த வெற்றியை நிலையான வெற்றியாகக்கொண்டு உலகின் பலமான நாடுகளாக மாறியபோதிலும், இலங்கையினால் அவ்வாறு தோற்றம்பெற முடியவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

தேசிய நல்லிணக்கம் உட்பட 27 வருடங்களாக வடக்கிலும், தெற்கிலும் மக்களிடையே நிலவிய சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையை செங்கற்களாலும், சீமெந்தினாலும் கட்டியெழுப்ப முடியாதென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வடபகுதியில் காணி விடுவிப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, தமக்குரிய காணியை மற்றுமொருவர் கையகப்படுத்துவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாதென சுட்டிக்காட்டியதுடன், வடக்கிலுள்ள மக்கள் கடந்த 27 வருட எதிர்ப்பார்ப்புடனேயே தமது காணிகளை கோரிநிற்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் புதிய முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பில் ஜப்பானின் முன்னணி நிறுவனங்கள் சில மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இதுதவிர ஜீ_7 மாநாட்டிற்கு முன்னோடி மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு உலகத் தலைவர்களால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவினால் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதிக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன், ஜேர்மன் சான்ஸ்லர் எஞ்சலா மேர்கல், அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டின் லகாட் உள்ளிட்ட அரசத் தலைவர்கள் பலர் ஜனாதிபதிக்கு இதன்போது தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இலங்கையின் எதிர்கால பயணத்திற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக அரச தலைவர்கள் இதன்போது ஜனாதிபதியிடம் வாக்குறுதி வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.