Breaking News

எனது பிள்ளைகளின் நிலை என்ன? கதறியழும் பிரபாவின் மனைவி

நல்லாட்சி அரசுக்கு இது நன்றாக இருக்கின்றதா? எனது இரண்டு பிள்ளைகளுக்கும் இனி என்ன நிலை? கல்வி கற்றுக் கொண்டிருக்கும் அவர்களை நான் எப்படி பாதுகாப்பேன் என இன்று கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளரின் மனைவி கயல்விழி கண்ணீருடன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் தனது கணவர் கைது செய்யப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

எனது கணவரை இறுதி யுத்தத்தில் தவறவிட்டிருந்தேன். அப்போது நான் எனது 30 நாள் மகளுடன் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துவிட்டேன்.

எனது கணவர் இறந்து விட்டார் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு எனது கணவர் தடுப்பு முகாமில் உள்ளதாகவும் என்னை வந்து சந்திக்குமாறும் தொலைபேசி அழைப்பு வந்தது.

அதன் பின்னர் என்னிடம் இவர் புனர்வாழ்வு பெற்றதற்கான கடிதத்தை தந்ததுடன் நான் இவரை பொறுப்பேற்றுக் கொண்டதாக என்னிடம் கையொப்பம் வேண்டிவிட்டு என்னிடம் எனது கணவரை அன்றும் ஒப்படைக்கவில்லை.

அவர்கள் மட்டக்களப்பில் உள்ள திரி.எம்.எஸ்.என்ற புலனாய்வு அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒரு மாதங்கள் வைத்திருந்த பின்னரே எனது கணவரை என்னிடம் ஒப்படைத்திருந்தனர்.இதன் பின்னர் தொழில் இன்றி மிகுந்த கஸ்டப்பட்டு பனையோலை பின்னும் வேலை செய்து வந்தோம்.

பின்னர் மூன்று மாதங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்பக் கல்லூரில் உள்ள சிற்றூண்டி சாலையினை எடுத்து நடாத்தி வருகின்றோம்.இந்த நிலையில் எனது கணவரை நல்லாட்சி அரசாங்கம் கைது செய்துள்ளது என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.