Breaking News

இன்று உலக பத்திரிகை சுதந்திர தினமாகும்



ஊடகங்களின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்தியம்பும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தை கட்டடிக்காப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) உலக பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுப்பதில் முக்கிய பங்காற்றிவரும் ஊடகங்கள், தர்மத்தை கடைப்பிடித்து செயற்பட்டுவரும்போது எதிர்கொள்ளும் சவால்களுக்கும் பஞ்சமில்லை. அநீதிகளை தட்டிக்கேட்டு சுட்டிக்காட்டிய, அதற்கெதிராக குரல்கொடுத்த எத்தனையோ பத்திரிகை நிறுவனங்கள் சேதமாக்கப்பட்டும் எரியூட்டப்பட்டும், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டதுமான கொடிய வரலாறு இலங்கைக்கும் உண்டு.

அந்த வகையில், ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் 19ஆவது திருத்தத்தில் உள்ள பேச்சுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும், அவற்றை சர்வதேச நாடுகளுக்கு நினைவூட்டும் வகையிலும் ஐக்கிய நாடுகள் சபையினால் இன்றைய தினம் உலக பத்திகை சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1993ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, வருடந்தோரும் மே மாதம் 3ஆம் திகதி பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு, ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் ‘யுனெஸ்கோ ஃகிலெர்மோ கானோ’ எனும் உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது, 1986ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட, கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினைவாக வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக அவரது படுகொலையின் பின்னரே, பத்திரிகை சுதந்திரம் பற்றிய பேச்சும் வலுப்பெற்றது.

இன்றைய நாளில் உலக அமைதிக்காகவும், ஊடக சுநத்திரத்திற்காகவும் பல இன்னல்களை தாண்டி போராடிய பத்திரிகையாளர்கள் கௌரவிக்கப்படுவர்.

இலங்கையை பொறுத்தளவில், உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான பட்டியலில் 165ஆம் இடத்திலிருந்து 141ஆவது இடத்திற்கு முன்னேறியிருந்தாலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் கொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தாக்கி அழிக்கப்பட்டமை குறித்து, இன்றுவரை எவ்வித நீதியும் கிடைக்காது மௌனித்துப் போயுள்ளது. அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளமை போன்று, கடந்த கால ஊடக கொலைகளுக்கும் நியாயம் கிடைக்குமென்றே நம்பவேண்டியுள்ளது.