Breaking News

இராணுவத்திடமிருந்து சிறுவர்களைக் காப்பாற்றுமாறு கோரிக்கை!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முன்பள்ளி மாணவர்களைக் காப்பாற்றுமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதுவும் செய்ய முடியாத நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்வதாகவும் பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

மாகாணக் கல்வி அமைச்சின் செயற்பாடுகள் பேச்சளவில் மாத்திரமே காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள பெற்றோர், மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெளிப்படையாக இருந்த இராணுவ மயமாக்கல் தற்போதைய ஆட்சியில் மிகவும் இரகசியமான முறையில் திட்டமிட்ட வகையில் இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

வன்னியில் இராணுவத்திற்காக பொதுமக்களது உறுதிக் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கை திட்டமிட்ட வகையில் தொடர்வதாகவும் மக்களது வசிப்பிடங்களில் காணப்படும் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வேலையற்று இருந்த தமிழ் இளைஞர், யுவதிகளை சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவில் வேலைவாய்ப்பு எனக்கூறி இணைத்துக்கொண்ட ஸ்ரீலங்கா இராணுவப் படைப் பிரிவு, அவர்களை விவசாயப் பண்ணைகள், பாலர் பாடசாலைகள் எனப் பல்வேறுபட்ட நிறுவனங்களில் இராணுவத் தலைமையின் கீழ் பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

இதில் சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவு முன்பள்ளி ஆசிரியைகள் கற்பிக்கும் முன்பள்ளிகளை இராணுவம் தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதுடன் அங்கு இடம்பெறும் செயற்பாடுகளை இராணுவமே தீர்மானிக்கின்றது.இராணுவத்தினது சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவு முன்பள்ளிகளில் கற்கும் மாணவர்கள் இராணுவத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இராணுவச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ள சீருடைகளைத்தான் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சீருடைக்கான பணமாக 600 ரூபாவை முன்பள்ளி மாணவர்களது பெற்றோர் செலுத்தி இராணுவச் சீருடையைப் பெற்று சிறார்களுக்கு அணிவித்து முன்பள்ளிகளுக்கு அனுப்புமாறு சிவில் பாதுகாப்புப் படையணியைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியைகள் வற்புறுத்துவதாகவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். தமது சிறுவர்களை முன்பள்ளிகளில் கல்விகற்கத்தான் அனுப்பியதாகவும் சிறுவர்களை இராணுவப் படைப் பிரிவில் இணைப்பதற்கு அனுப்பவில்லை என தெரிவிக்கும் பெற்றோர்,

இந்த விடயத்தில் மாகாணக் கல்வி அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன் முன்பள்ளிச் சிறார்களை இராணுவப் படைப்பிரிவில் இணைப்பதிலிருந்து காப்பாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்வி அமைச்சின் கீழ் இருக்கவேண்டிய முன்பள்ளிக் கல்விக் கட்டமைப்பு தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுசெல்லப்பட்டு இராணுவப் பிடியில் சிக்கியுள்ளதானது பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.