பிக்குகளாக தமிழச் சிறுவர்கள்! மதமாற்றமா? இனமாற்றமா?
வவுனியா மாவட்டம் சிங்கள மயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டம். மாவட்டத்தின் பல பகுதிகள் சிங்களக் குடியேற்றங்களால் அடையாளம் இழந்துள்ளன. இந்த நிலையில் மாவட்டத்தை மாத்திரமின்றி முற்றுமுழுதாக தமிழ் மண்ணையே மாற்றியழிக்கும் வேலை மிக அமைதியாக அங்கு இடம்பெறுகின்றது.
வவுனியாவில் போரால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தமிழ்ச் சிறுவர்கள் சிங்கள பௌத்தர்களாக மதம் மாற்றப்படுவதாக மாவட்டத்தில் பணிபுரியும் சில அரச உத்தியோகத்தர்கள் சொன்னார்கள்.
இதற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை நாட்டில் உள்ள ஊடகங்களும் கண்ணை முடியிருந்தன. எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் இத்தகைய இன அழிப்பு வேலையை ஸ்ரீலங்கா அரசு முன்னெடுத்து வருகின்றது. அதனை நாம்தான் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றோம். வவுனியா மாவட்டத்தில் சிங்கள பௌத்த பிக்குகள் பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வறிய, பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் குடும்பங்களை இலக்கு வைத்தே இந்த செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன.
கடந்த சில வருடங்களின் முன்னர் போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சிங்கள பௌத்த பிக்கு ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். இதுபோன்ற பிக்குகள், போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுதாகவும் அவர்களை பராமரிப்பதாகவும் காட்டிக்கொண்டு பெருந்தொகையான பணத்தை சுருட்டிக்கொண்டு சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கின்றனர். கைதுசெய்யப்பட்ட குறித்த பிக்கு, இராணுவத்தினர் மற்றும் பொிலஸாரின் பாலியல் இச்சைகளுக்கும் சிறுவர்களை பலியாக்கினார்.
ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரையில் பிக்குகள் தெய்வங்கள். பேரினவாதத்தையும் பெருமதவாதத்தையும் கக்கும் பிக்குகள்தான்மேலான தெய்வங்கள். ஸ்ரீலங்கா ஒரு பௌத்த சிங்கள கடும்போக்கு நாடு என்று சொல்லப்படுவதற்கு காரணம், அது பௌத்த பிக்குகளின் எண்ணத்தின்படியே இயங்குகிறது. உண்மையில் ஸ்ரீலங்காவை ஆள்பவர்கள் சிங்கள பௌத்த பீடங்களின் ஆசியுடன்தான் ஆட்சியை மேற்கொள்ள முடியும். அவர்கள் நினைத்தால் எந்தக் கொம்பனையும் ஆட்சியிலிருந்து நீக்க முடியும்.
தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை வேட்டையாடிய மகிந்த ராஜபக்ச சிங்கள மக்களுக்கு எதிராகவும் திரும்பியபோது அவரை வீட்டுக்கு அனுப்ப பௌத்த பீடங்கள் முடிவு செய்தன. போரின் வெற்றியால் பெரு உச்சத்தில் இருந்த ராஜபக்சவை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. ஸ்ரீலங்காவின் அரைவாசிப் பேரின் எதிர்ப்பை ராஜபக்ச சம்பாதிக்க சிங்கள பௌத்த பீடங்கள் அவரை வீட்டுக்கு அனுப்ப நினைத்ததும் ஒரு காரணமாகும்.
வடகிழக்கில் பெருமளவான சிங்கள பௌத்த பிக்குகள் சிங்களம் மற்றும் பௌத்தத்தை பரப்பும் நோக்குடன் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். கொக்கிளாயில் சிங்கள பௌத்த பிக்கு ஒருவர் தமிழ் பொதுமகன்ஒருவரது காணியை அபகரித்து பாரிய பௌத்த விகாரையை கட்டுகிறார். நல்லாட்சி எனப்படும் ஸ்ரீலங்காவின் இன்றைய ஆட்சியினால் அது தடுத்து நிறுத்தப்படவில்லை. தமிழ் மக்கள் இல்லாத பகுதியில் ஏன் பௌத்த விகாரை? பௌத்த சிங்களத்தை ஏன் பரப்ப வேண்டும்?
யாழ்ப்பாணம் நயினாதீவில் பாரிய புத்தர் சிலை ஒன்றை எழுப்ப வேண்டும் என்று சிங்கள கடும்போக்குவாதிகள்இன்னொரு புறம் கங்கனம் கட்டி நிற்கின்றனர். இந்த நிலையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்று தமிழ் சிறுவர்கள் சிங்கள பௌத்த பிக்குகளாக மாற்றப்படுவது தொடர்பில் வெளியிட்டிருக்கும் காணொளி மிகவும் அதிர்ச்சி தருவதாகவும் தமிழ் இனம் சிந்திக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவும் அமைகின்றது.
போரால் பாதிக்கப்பட்டு மிக வறுமையில் உழல்ந்த சிறுவர்களை ஏமாற்றி அவர்களின் குடும்பங்களை ஏமாற்றி சிங்கள பௌத்த பிக்குவாக மாற்றுகிறார்கள் சிங்கள பௌத்த பிக்குகள். மதம் மாறுவது அவர்களின் சொந்த விருப்பம். ஆனால் அந்த சிறுவர்கள் சிங்களவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் தமிழ்ப் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன. அத்துடன் அவர்கள் இப்பொழுதே தமிழை மறந்துவிட்டார்கள். உண்மையில் அச் சிறுவர்கள் பௌத்த மதத்திற்கு மாற்றப்படவில்லை. சிங்கள இனத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
இந்த இனமாற்ற வேலையை செய்யும் சிங்கள பௌத்த பிக்கு தெளிவாகவே குறிப்பிடுகிறார். இந்த நாட்டில் உள்ள பிரச்சினையை தீர்க்க இதுவே நல்ல வழி என்கிறார். அதாவது தமிழ் ஈழத்தில் வாழும் அனைத்து தமிழ் ஈழ மக்களும் சிங்கள இனத்திற்கு மாறிவிட்டால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை என்கிறார் போலும். சிங்கள தேசம் தனது இனவாத மதவாத வெறியை எப்படி எல்லாம் வெளிப்படுத்துகிறது. ஒருபுறம் சிங்கள பௌத்த வெறியர்கள் தமிழ் ஈழத்தை ஒடுக்கும் அரசியல் உரைகளை கக்குகின்றனர்.
இன்னொருபுறம் எமது மண்ணில் வந்தே எம்மை மெல்ல மெல்ல சிங்களவனாக மாற்றுகின்றனர். ஏதும் அறியாத அப்பாவி பாலகர்களின் வறுமையை பாவித்து அவர்களை தமது இனத்திற்கு மாற்றி ஈழத் தமிழ் இனத்தை அழிக்கின்றனர். அந்த சிறுவர்களை பிக்குகளாக மாற்றி தமிழ் மண்ணில் சிங்கள பௌத்தத்திற்கு மத மாற்றம் செய்வதுதான் தமது இலக்கு என்று இந்த வேலையை செய்யும் பிக்கு குறிப்பிடுகிறார். இது ஆரம்பம் என்றே அவர் சொல்லுகிறார். ஆக, இதனால் தமிழ் ஈழம் பெரும் நெருக்கடிகளை சந்திக்கப் போகிறது.
உண்மையில் மிகவும் ஆபத்தான விடயம் இதுவாகும். ஸ்ரீலங்கா அரசால் திட்டமிட்ட ரீதியில் கட்டமைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் இன அழிப்பு சார்ந்த நடவடிக்கையில் இதுவும்ஒன்றாகும். இது தமிழ் இனத்தை அவர்களின் பண்பாட்டை, சரித்திரத்தை அழிக்கும் செயலாகும். இதனை முளையிலேயே தடுக்க வேண்டும். தமிழ் சமூகமும் அவர்களின் தலைமையும் தீவிரமைாக இது தொடர்பில் சிந்தித்து விரைந்து செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டயமாகும். இன அழிப்பிலிருந்து தப்ப இது மிக முக்கியமானது.








