மஹிந்தவுக்கு இராணுவ பாதுகாப்பை வழங்கவே முடியாது
''முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பை நீக்குவதற்கு பாதுகாப்புத்துறை எடுத்துள்ள தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. எந்த காரணம் கொண்டும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இராணுவப் பாதுகாப்பை வழங்கவே முடியாது'' என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.
இராணுவத்தின் சேவையை கொச்சைப்படுத்தும் வகையில் இவர்கள் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பு தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து வருகின்றார். இந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கொழும்பு ஊடகம் ஒன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இராணுவப் பாதுகாப்பு என்பது அரசியல் விவகாரம் அல்ல. இது நாட்டின் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயமாகும். அந்த விடயங்களில் அனாவசியமான விமர்சனங்களை முன்வைக்கவோ அல்லது தமது விருப்பத்துக்கு அமைய இராணுவ செயற்பாடுகளில் தலையிடவோ முடியாது. அவ்வாறு இருக்கையில் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபகஷ ஆகியோர் யுத்த வெற்றியை தமது சொந்த வெற்றியாக மாற்றிக்கொண்ட பின்னர் நாட்டில் இராணுவமயமாக்கள் மட்டுமே நடைபெற்றது. அதன் தாக்கம் இன்றுவரையில் அவர்களின் மனங்களில் உள்ளது.
எவ்வாறு இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இராணுவப் பாதுகாப்பை நீக்கிவிட்டு சிவில் பாதுகாப்பை மாத்திரம் வழங்குவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் பாதுகாப்பு சபையின் ஆலோசனைக்கு அமையவும் நாட்டின் சூழ்நிலையை கருத்தில் கொண்டுமே எடுக்கப்பட்டது. ஆகவே இப்போது எடுத்திருக்கும் இந்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் போன்று செயற்படுகின்றார். ஆகவே அவரை சாதாரண நிலையில் தான் கவனிக்க வேண்டும். எனினும் நாம் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்தையும் வழங்கியுள்ளோம். பாதுகாப்பு விதிகளை மீறி அவருக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கபட மாட்டாது.
மேலும் இவர்கள் எமது ஆட்சியை குழப்ப ஏதாவது ஒரு காரணத்தை தேடுகின்றனர் என்பதே உண்மையாகும். அதற்காகவே இராணுவ விவகாரங்களை கூட இவர்கள் அரசியலாக்குகின்றனர். எனினும் இராணுவ விடயங்களை விமர்சிப்பதையும், பாதுகாப்பு தரப்பை கொச்சைப்படுத்தும் செயல்களையும் இவர்கள் உடனடியாக கைவிட வேண்டும். தேசிய பாதுகாப்பை குழப்பும் வகையிலும், இராணுவத்தை விமர்சிக்கும் வகையிலும் செயற்படாது இராணுவத்தின் சேவைகளை பலப்படுத்த வேண்டும் என்றார்.








