Breaking News

இலங்கை பாதுகாப்புப்பிரிவு விசாரணையின்போது சித்திரவதை செய்கிறது:ஐ.நா குழு



திருகோணமலை கடற்படை முகாமிற்குள் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்தமையை தாம் நேரில் அவதானித்துள்ளதாக சித்திரவதை மற்றம் நீதிமன்ற சுயாதீனத்துவம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அழைப்பில் கடந்த 29ஆம் திகதி கொழும்பை சென்றடைந்த குறித்த நிபுணர் குழு ஐக்கிய நாடுகளின் கிளை அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை பகல் விசேட ஊடகவியலாளர் மாநாட்டை ஒழுங்கு செய்திருந்தது.

இதன்போது உரையாற்றிய போதே ஐ.நா சிறப்பு நிபுணர்கள் இதனைக் குறிப்பிட்டனர்.இந்த இரகசிய தடுப்பு முகாம்கள் கடந்த காலங்களில் பயன்படுத்தப்படவில்லை என எவரும் தமக்கு கூறவில்லை எனவும், இந்த தடுப்பு முகாம் குறித்து எவரும் கருத்து தெரிவிக்கவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யுத்த காலத்துடன் ஒப்பிடுகையில் சித்திரவாதைகள் குறைவடைந்துள்ள போதிலும், அந்த நடவடிக்கைகள் முழுமையாக குறைவடையவில்லை என ஐநா நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைகளின் போது தொடர்ந்தும் சித்திரவதைகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸார் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்தை பின்பற்றுவதில்லை எனவும், நீதிமன்றமும் பொலிஸாரின் தகவல்களை ஏற்றுக்கொள்கின்றமை பிழையான விடயம் எனவும் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்கள் நடாத்திச் செல்லப்பட்டு வருவதாகவும், அது சிறந்த நடவடிக்கை அல்லவெனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.தாம் வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திற்கு விஜயம் செய்திருந்ததாகவும், அங்கு 40 பேர் தங்கியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களில் 39 ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவதாக சுட்டிக்காட்டிய நிபுணர்கள், அது மிக மோசமான நிலை என கூறியுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீலங்காவிலுள்ள சிறைச்சாலைகளை எடுத்துக் கொண்டால், சிறையொன்றில் 500 வீதமான சிறைக்கைதிகள் உள்ளதாக குறிப்பிட்ட நிபுணர்கள், அது மோசமான நிலை என சுட்டிக்காட்டினர்.

மேலும், அரசியலமைப்பு சபை மிகுந்த சிறந்த சேவையை நாட்டிற்காக வழங்கும் என தாம் நம்புவதாக ஐ.நா நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.தமது விஜயத்தின் போது தயாரிக்கப்பட்ட அறிக்கை எதிர்வரும் ஓரிரு மாதங்களில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் சில வன்முறைகளை ஒத்ததான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அவர்கள் குறிப்பிட்டதோடு இவ்வாறான வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடு ஜனநாயகத்தை நோக்கி சிறந்த முறையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், இவ்வாறான சிறுசிறு வன்முறைகள் தவிர்க்கப்படும் பட்சத்தில் நாடு சிறந்தவொரு இடத்தை அடையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், ஸ்ரீலங்கா ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துக் கொண்டுள்ளதாகவும் ஐநா நிபுணர் மொனிகா பின்டோ கூறியுள்ளார்.தமது விசாரணை நடவடிக்கைகளுக்கான முழுமையான ஒத்துழைப்புக்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

தாம் கோரிக்கை அனைத்து விடயங்களை அரசாங்கம் செய்துக் கொடுத்ததாகவும், தமது விசாரணைகளில் தாம் முழுமையான திருப்தியடைந்துள்ளதாகவும் ஐநா நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், தமது கோரிக்கைகளையும் அரசாங்கம் இதேபோல் செயற்படுத்தும் என தாம் நம்புவதாக ஐநா நிபுணர்கள் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.