Breaking News

இராணுவத்தை பலி கொடுக்கும் சட்டமூலத்தை தோல்வியடைய செய்ய வேண்டும்: விமல்



காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பது குறித்த சட்டமூலத்திற்கு தங்களது எதிர்ப்பை வெளியிடுமாறு அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்ட மூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இது நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த இராணுவத்தினரை பலி கொடுக்கும் ஒரு செயற்பாடாகும்.

கடந்த அரசாங்கத்தினால் காணாமல் போனோரை கண்டறிவது குறித்து ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை உள்ளடக்கிய பிரதேசங்களுக்கு சென்று விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கையொன்றையும் சமர்ப்பித்திருந்தனர். இவ்வாறு இருக்கையில் தற்போது புதிய அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்வதானது மேற்கத்தேய நாடுகளின் தூண்டுதல்களின் அடிப்படையில் இராணுவத்தினரை பலி கொடுக்கும் செயலாகும்.

மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வீதியில் இறங்கி நடமாடுவதற்கு வழியமைத்த இராணுவத்தினர்கள், தற்போது நாட்டின் பாரிய குற்றவாளிகளாக வர்ணிக்கப்படுகின்றனர். பெரும்பாலான இராணுவத்தினருக்கு எதிராக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ளவர்கள் மீதும் குற்றச்சாட்டு பதிவுசெய்யும் ஒரு நடவடிக்கையே இந்த காணாமல் போனோர் தொடர்பாக ஸ்தாபிக்கப்படவுள்ள அலுவலகம்.

நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டிய இராணுவத்தினரை சர்வதேசத்துடன் இணைந்து பலி கொடுக்க முயலும் இந்த ஆட்சியாளர்களின் செயற்பாட்டுக்கு அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பது குறித்த சட்டமூலத்தை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.