Breaking News

ஜெனிவா தீர்மானத்தை அமெரிக்கா நீர்த்துப்போகச் செய்யாது - உலக தமிழர் பேரவை நம்பிக்கை



ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா நீர்த்துப்போகச் செய்யாதென உலக தமிழர் பேரவை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தீர்மானத்திற்கு மதிப்பளிக்கும் விடயத்தில் அமெரிக்கா மென்மையான அணுகுமுறையை பின்பற்றுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது, பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானத்தில் யுத்தக் குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த விசாரணைகளில் சர்வதேச வழக்கு தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என குறித்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தீர்மானத்தின் பின்னரான முன்னேற்றங்கள் குறித்து இம்மாத இறுதி வாரத்தில் வாய் மூல அறிக்கைகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவை பெற்றுக்கொள்ளவுள்ளது.

பொறுப்புகூறலுக்கான பொறிமுறையின் நம்பகத்தன்மைக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் தலையீடு அவசியம் என ஜெனிவாவிற்கான அமெரிக்க பிரதிநிதி கெய்த் ஹாப்பர் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி குறிப்பிட்டதாக சுரேந்திரன் கூறியுள்ளார்.



இந்த நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்கா மாறாது என உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.