Breaking News

வடபகுதி காணிப் பிரச்சினை : கொள்கைகள் இல்லாத அரசாங்கம்

வட பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த மக்களுக்குரிய காணிகள், உரிய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.


அதேநேரம் அரசாங்கம் தங்களுடைய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதும், பாதுகாப்பை தக்கவைத்துக் கொள்வதும் அரசாங்கத்தினுடைய கடப்பாடு என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இராமலிங்கம் சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வட பகுதியில் காணிப் பிரச்சினையை மிகவும் சிக்கலான பிரச்சினை எனக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கை கொள்கை ரீதியான நடவடிக்கையாகத் தென்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு கொள்கையொன்று இல்லை என்பது இதன்மூலம் மேலும் மேலும் நிரூபணமாவதாகவும் வடபகுதி மக்கள் மற்றும் அரசியல் வாதிகளுடன் பேசுகின்ற போது, காணிப் பிரச்சினை தொடர்பில் அவர்களுடைய கருத்தாக்கம் வேறாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தென்பகுதியில் சிங்கள இனவாதம் மேலோங்குகின்ற பொழுது வடபகுதி காணிப் பிரச்சினை சம்பந்தமாக வேறுவிதமாக பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடபகுதி காணிப் பிரச்சினை தொடர்பாக கொள்கை இல்லாத அரசாங்கமாகவே இந்த அரசாங்கத்தின் செயற்பாடு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.