Breaking News

அகிம்சை போராட்டங்களுக்கு அதிகூடிய மதிப்பளியுங்கள்

இந்திய தேசத்தின் விடுதலை என்பது மகாத்மா காந்தி மேற்கொண்ட சாத்வீகப் போராட்டத்தினால் சாத்தியமானது. 

மகாத்மா காந்தி மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டமே பாரத பூமிக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தது எனும் போது அதன் மறுமுனை, மகாத்மா காந்தியின் அகிம்சைப் போராட்டத்திற்கு ஆங்கிலேயர் கொடுத்த அதி உன்னத மரியாதை காரணமாகவே, விடுதலை சாத்தியமாயிற்று எனலாம். 

ஆக, அகிம்சைப் போராட்டம் என்பது சாத்வீகமானது. யாருக்கும் தீங்கில்லாதது. வன்முறைகள் இன்றி-அதர்மம் இன்றி தர்மத் தின் வழியில் நீதியின் பெயரால் மக்கள் தங்கள் அவலத்தை-குறையை-தீராப் பிரச்சினையை எடுத்தியம் புவதற்காக மேற்கொள்வது. 

எனவே, அகிம்சைப் போராட்டம் நடக்கும் போது அதற்கு அதி உன்னதமான மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் நீதிதழைக்கும். அறம் ஓங்கும். மாரி பொழியும். 

இதைவிடுத்து அகிம்சைப் போராட்டங்களை ஒரு சாதாரண விடயமாக-பெறுமதியில்லாத ஒன்றாகப் பார்ப்பதென்பது மிகப்பெரும் அபத்தமாகும்.  அகிம்சைப் போராட்டங்கள் எங்களை எதுவும் செய்யாது என்று சம்பந்தப்பட்ட தரப்புகள் எண்ணுமாயின் அதுவே மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக அமையும். 

ஆகவே அகிம்சைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது அது கண்டு சம்பந்தப்பட்ட தரப்புகள் கவலை கொள்ள வேண்டும். இது எங்கள் ஆட்சிக்கும் நிர்வாகத்திற்கும் இழுக்கு என்று உணரவேண்டும். எனவே இத்தகைய போராட்டங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் சட்டம், நீதி, ஒழுங்கு பாது காக்கப்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டை எடுத்துக் கொள்வதுடன், 

இந்த நாட்டில் இன்றைய தினம் வட மாகாணம் முழுமையிலும் நடக்கின்ற பூரண கடையடைப்பு என்பது-இரண்டு பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் சுட்டுக் கொன்றதால் ஏற்பட்ட மனக்குமுறலின் வெளிப்பாடாகும். அதிலும் வன்னிப்பெரும் நிலப்பரப்பில் நடந்த கொடூர யுத்தத்தால் தமிழினத்தை சங்காரம் செய்து தமிழி னம் மீள முடியாது என்று ஆக்கிய பேரினவாத ஆட்சி கலைந்து நல்லாட்சி அமைந்தது என்று மக்கள் நம் பியிருக்கையில், அந்த ஆட்சியில் நடந்த ஒரு நெட் டூரத்தை வெளிப்படுத்துவதாகவே இன்றைய அகிம் சைப் போராட்டம் அமைகிறது.

ஆக, இப்போராட்டத்திற்கு ஆட்சியாளர்களும் படைத்தரப்பும் அதிஉச்ச மரியாதை செலுத்த வேண்டும். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

இவை யாவற்றுக்கும் மேலாக இத்தகைய சம்பவங்கள் ஏற்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மாயின் அதற்கான ஒரே வழி இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைப்பதாகும். 

இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட்டு வடக்குக் கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சியில் பொலிஸ்-காணி அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் போது நிலைமை ஒரு பெரும்மாற்றத்துக்கு உட்படும். 

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். இனவாதம் அடியோடு அற்றுப்போகும். ஆகையால் இந்த நாட்டில் நடந்த அத்தனை இனத்துவ அழிவுகளுக்கும் காரணமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் முக்கியமானதாகும். 

இதுவிடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமை யிலான அரசு மகத்தான வெற்றியை எட்ட வேண்டும். இது சாத்தியமாக இருந்தால் இனத்துவ பழி தீர்த் தல்களும் இனத்தின் பெயரால் நீதி மறைக்கப்படுவதான சதித்திட்டங்களும் இல்லாமல் போகும். 

ஆனால் இன்று நடைபெறும் அகிம்சைப் போராட்டத்திற்கு உரிய மதிப்புக்கொடுத்து பிரச்சினையற்ற சூழ்நிலையை உருவாக்குவதே சாலப்பொருத்துடையதாகும்.