Breaking News

தமிழர்களின் புனித மாதத்தில் இசை நிகழ்வுகள் நடத்துவதை நிறுத்த வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

தமிழர்களின் புனித மாதத்தில் இசை நிகழ்வுகள் நடத்துவதை நிறுத்த வேண்டும் என வன்னி பராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை மைதானத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சி மற்றும் களியாட்ட நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்த நிலையில் அவர்களை நினைவு கூறவேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ் மக்களிடம் உள்ளது. இந் நினைவு கூரும் நிகழ்வை இம் மாதம் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டித்து வருகின்றனர். இந்நிலையில் இசை நிகழ்வுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகளை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

இராணுவத்தில் இருந்து பலியானவர்களுக்கு வெற்றிவிழா கொண்டாடுவதுடன் இராணுவ வீரர்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் அரசிற்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பி போன்ற அமைப்பினர் தங்கள் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் தங்களது விடிவிற்காக உயிரிழந்தவர்களையும், அரச பயங்கரவாத்தால் பலியான தமது உறவுகளையும் நினைவு கூற தடை விதிப்பதும் அந்த நாட்களில் இசை நிகழ்வுகளை நடத்துவதும் நல்லாட்சி எனப்படும் தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றிபெற்ற அரசின் செயற்பாட்டுக்கு உகந்ததல்ல.
மகிந்த ராஜபக்ச போரில் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியாத நிலை காணப்பட்டது. இவரது நிலையையே தற்போதைய அரசாங்கமும் ஏற்படுத்த முனைகின்றது. எனவே தமிழர்களின் புனித மாதத்தில் அவர்கள் தங்கள் உறவுகளை நினைவு கூரும் நிலையில் இசை நிகழ்வுகள் நடத்துவதை நிறுத்தி தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.