மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு வவுனியா பிரஜைகள் குழு அழைப்பு
யுத்தத்தில் உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினமான எதிர்வரும் 27ஆம் திகதி, அஞ்சலி நிகழ்வுகளுக்காக வவுனியா மவாட்ட பிரஜைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது.
அன்றைய தினம் மாலை 6.05 மணிக்கு வவுனியா நகரத்தில் ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு, மாதிரி கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மண்டப நிகழ்ச்சியாக மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறுமென குறித்த குழு அறிவித்துள்ளது.
‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 27′ எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் குறித்த நினைவேந்தல் நிகழ்வில், மாவீரர் போராளி குடும்பங்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழின உணர்வாளர்கள், சிவில் சமூக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரையும் சமவாய்ப்புடன் பங்கேற்று, தமிழ்த் தேசிய இனத்தின் வீர ஆத்மாக்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துமாறு வவுனியா பிரஜைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது.
அத்தோடு, ஒவ்வொரு தமிழ் பிரஜையையும் அன்றைய தினம் மாலை 6.5இற்கு தத்தமது இல்லங்களின் வாசல்கள் தோறும் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துமாறும் குறித்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.








