Breaking News

ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பையே அறிமுகப்படுத்துமாறு, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இலங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இலங்கை அதிபரின் செயலகத்தில் நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

அரச தரப்பில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மாத்திரமே இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார். சுமார் இரண்டு மணிநேரம் இந்தச் சந்திப்பு நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பின் போது, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான கரிசனைகள் மற்றும் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளடங்கிய மனு ஒன்றை, கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், இலங்கை அதிபரிடம் கையளித்தார்.

இந்த மனுவில் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

அரசியலமைப்புத் திருத்த விவகாரங்கள் குறித்தே இந்தச் சந்திப்பில் முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, தற்போதைய அரசியலமைப்பில் திருத்தங்களை மாத்திரம் செய்தால் போதாது என்றும், புதிதாக ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதே தீர்வாக இருக்கும் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை அதிபரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கில் இலங்கை படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமது தொகுதிகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும், இலங்கை அதிபருக்கு விளக்கியுள்ள கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவற்றுக்கான தீர்வுகளையும் முன்மொழிந்துள்ளனர்.

அதேவேளை, வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்புக்கு முன்னதாக, மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரையும், சந்தித்துக் கலந்துரையாடுவதாக இலங்கை அதிபர் உறுதி அளித்துள்ளார்.