Breaking News

சைவமும் தமிழும் இணைந்ததான முதல்வரை வடக்கு பெற்றுள்ளது

வடக்கு - கிழக்கு மாகாணம் இன்று சைவ சமய வாழ்வியலை மறந்து மாறிக்கொண்டு உள்ளது என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், ஒரு சைவ சமயத்திலுள்ள தமிழரை, சைவமும் தமிழும் இணைந்த பெருமகனை நீங்கள் இந்த மண்ணில் ஒரு மாகாண சபை முதல்வராக பெற்று இங்கு கொண்டு வந்து இருத்தி வைத்துள்ளீர்கள் எனவும் கூறியுள்ளார். 

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவையொட்டி ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை ஆரம்ப நிகழ்வு நல்லூர் ஸ்ரீ துர்க்கா மணிமண்டபத்தில் நேற்று இந்து சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைப்பெற்றது. இங்கு உரையாற்றிய போதே யோகேஸ்வரன் எம்.பி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆறுமுகநாவலர் அன்று கண்ட கனவு, எதிர்பார்த்த கனவு இன்று நிறைவேறியிருக்கிறது எனக் கூறிப் பெருமிதப்பட்ட அவர், துரதிஷ்டவசமாக சில காலத்திற்கு முன்னர் நீங்கள் ஆறுமுகநாவலர் கண்ட கனவுக்கு மாறான அரசியல்வாதிகள் சிலரையும் அனுப்பி வைத்திருக்கிறீர்கள். ஆகவே, உங்களிடம் கேட்பது ஒன்று தான். அரசியலுக்கு ஆயிரம் பேர் வருவார்கள்.
ஆனால், எமது சைவத்தையும், தமிழையும் உண்மையாகப் பாதுகாக்க எத்தனை பேர் முன் வருகிறார்கள். பெரும்பாலும் அவ்வாறு வருபவர்களில்லை.

ஆகவே, ஆறுமுகநாவலர் காட்டிய பாதையை நாங்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒவ்வொருவரும் சைவர்களாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும். எம்மில் எத்தனை பேர் அவ்வாறு வாழ்கிறோம். எமது மண்ணிலே சைவத்தையும், தமிழையும் வளர்த்த பெருமகன் நாவலர் பெருமான். அப்படிப்பட்ட ஆறுமுகநாவலரின் வழியை எம்மில் எத்தனை பேர் பின்பற்றி நிற்கிறோம் என்றால் அது நாயன் மார்கள் வாழ்க்கை முறையாகவிருக்கலாம். 

அவர்கள் பாடிய திருமுறைகளாகவிருக்கலாம். அவர்கள் தமிழையும், சைவத்தையும் ஒன்றித்துப் பாடியிருக்கிறார்கள். திருநாவுக்கரசு நாயனார் தமிழர்கள் யார் எனச் சுட்டிக்காட்டிப் பாடியிருக்கிறார்கள். இவ்வாறு பலவிடயங்களில் தமிழர்கள் சைவர்கள் தான் எனச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. ஏனைய வர்கள் எல்லாம் தமிழ் பேசுபவர்கள். இதை நான் உரத்துச் சொல்வதற்கு எப்போதும் தயங்க மாட்டேன். தமிழர்களுக்கு மாத்திரம் தான் தாம் சைவர்கள் என்று சொல்லும் உரிமையிருக்கிறது.

இதனை நாங்கள் இவ்வாறு சொல்வதால் பலருக்கும் பிரச்சினை. அந்நியர் ஆட்சிக்காலத்தில் இலங்கை நாடும், இந்திய நாடும் அந்நியருக்கு அடிமைப்பட்டதால் கலாசார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக மற்றும் மொழி ரீதியாக நாங்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் அவர்களுடனிருந்து கொண்டே எமது சைவத்தையும், தமிழையும் வளர்த்தார். 

அந்நியர்கள் ஆட்சிக் காலகட்டத்தில் சைவ ஆலயங்கள் உடைக்கப்பட்டன. சைவசமயி என்றே தன்னை வெளிக்காட்டப் பயந்த காலகட்டத்தில் ஆறுமுகநாவலர் ஒரு சைவ மறுமலர்ச்சியை எமது மண்ணிலே ஏற்படுத்தினார்.

நாவலரின் பணியை சமயப் பணியாக, கல்விப் பணியாக, ஆன்மீகப் பிரசாரப் பணியாக, நூல்களை அச்சிட்டு வெளியிடுகின்ற மாபெரும் பணியாகவும் மட்டுமல்லாமல் அவர் அரசியல் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். நாவலர் அரசியல் ரீதியாகவும் பின்னணியாகச் செயற்பட்டிருக்கிறார் என்ற விட யத்தைப் பல நூல்கள் மறைத்திருக்கின்றன. 

குறிப்பாக 1853 ஆம் ஆண்டு சைவப்பிரகாச சபை முதன்முதலாகத் தமிழர் தாயகத்தில் அமைந்த ஒரு தமிழ் அமைப்பு. இந்த அமைப்பு வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் மற்றும் தென் மாகாணத்தி லுமிருந்தது. இந்தச் சபை மூலம் சைவசமய எழுச்சி இடம்பெற்றது.

இச்சபையின் நிகழ்வுகளில் ஆறுமுகநாவலர் உரையாற்றுகின்ற போது தமிழ் மறுமலர்ச்சியை அரசியல் ரீதியாக ஏற்படுத்தியிருக்கிறார். இன்று எமது மண்ணில் தமிழர் உரிமைப் புரட்சிக்கு வித்திட்டவர் ஸ்ரீலஸ்ரீ ஆறு முகநாவலர் என்றால் அது மிகையாகாது என குறிப்பிட்டார். 

மேலும் இன்று யாழ் மண் என்ன?, வட மாகாணம் என்ன?, கிழக்கு மாகாணம் என்ன? எல்லாம் சைவ வாழ்வியலிலிருந்து மாறிக்கொண்டிருக்கிறது மறந்து கொண்டிருக்கிறது எனவே இவ்வாறான விடயங்களில் மாற்றம் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.