Breaking News

வீரமும் ஈரமும் நிறைந்த எம் தலைவனுக்கு இன்று 62

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இன்று 26ஆம் திகதி 62ஆவது பிறந்த தினமாகும். வல்வெட்டித்துறையில் வேலுப்பி ள்ளை மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோருக்கு 1954ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி மகனாக பிரபாகரன் பிறந்தார். 


சிறுவயது முதலே விடுதலை சிந்தனை கொண்டவராக வளர்ந்த அவர், வல்வெட்டித்துறையில் ஊரிக் காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ஆம் வகுப்பு வரையிலும் கற்றார்.  

தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10-ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் விடுதலைப் போராளியாக செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரனின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. 

ஒருநாள் பொலிஸார் பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடு வந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.  1972இல் புதிய தமிழ் புலிகள் அமைப்பு என்ற அமைப்பை தனது 18ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 

1975இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த கால கட்டத்தில்,யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு அவர் தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டார்.  1976 மே மாதம் 5ஆம் திகதி புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது. 

உலகத் தமிழர்கள் அவரைத் தமிழ்த் தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, அமெரிக்கா மற்றும் சில நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என இந்திய மத்திய அரசு முனைப்பு காட்டியது. 

தொடர்ந்த உள்நாட்டுப் போரில் இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, ஆம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் திகதி முல்லைத்தீவு பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. எனினும் அவரது மரணம் தொடர்பில் நீடித்த பல்வேறு சந்தேகங்களினாலும் மாறுபட்ட தகவல்களாலும் தலைவருக்கு என்ன நடந்தது என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.

அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்ரனி; இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது. மனைவி மதிவதனியின் நிலையும், மகள் துவாரகாவின் நிலையும் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுடன் என்னவாயிற்று என அறிய முடியவில்லை. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னிகரில்லா தலைவராக உலக தமிழர்களால் போற்றப்படும் அவருக்கு இன்று 62 ஆவது பிறந்த தினமாகும்.

வழமை போன்று இம்முறையும் அவரது பிறந்த தினம் உலக தமிழர்களால் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான தடை  உள்ளதனால் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சில இடங்களில் இந்த பிறந்த தின நிகழ்வுகள் அனுஷ்டிப்படுவது வழமையாகும். பிரபாகரன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது பல கருத்துக்களை கூறியிருந்தார். அவை தற்போது நிதர்சனமாக நடைபெறும் அளவிற்கு அவருக்கு எதிர்காலம் தொடர்பான கணிப்பு இருந்ததாக அரசியல் அவதானிகள் பலர் தற்போதும் கூறி வருகின்றனர்.

ஏதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போராளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாற வேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்பட வேண்டும் என மாவீரர்கள் தொடர்பில் பிரபாகரன் கூறிய கருத்துக்கள் அமைந்திருந்தன.