Breaking News

தமிழின விடுதலைக்கான போரில் உயிர் நீத்தவர்களை அஞ்சலிப்போம்.கூட்டமைப்பு,முன்னணி அழைப்பு

தமிழீழ விடுதலைப்போரில் உயிர் நீத்த அத்தனை உயிர்களுக்காகவும் நாளை 27 ஆம் திகதி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன அறிவித்துள்ளன. 


உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை சட்டரீதியாக எவரும் தடுக்க முடியாது எனவும் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன விடுதலைக்கான போரில் போராளிகள் உள்ளிட்ட பொது மக்கள் இலட்சக் கணக்கானோர் தம்முயிரை அர்ப்பணித்துள்ளனர். அவ்வாறு உயிர் நீத்த உறவுகளுக்காக கண்ணீர் வடிப்பதும் அஞ்சலி செலுத்துவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். இவ்வுரிமை மனங்களுக்கு, ஆத்மாக்களுக்கு ஆறுதல் தருவதாகும்.

மத நம்பிக்கை கொண்ட மக்கள் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவது மட்டுமல்ல ஈமக்கடன் செய்வதும் அவரவர் நம்பிக்கையின்படி பாரம்பரியமும் கடமையுமாகும். இதில் வெற்றி தோல்வி என்ற பரிசீலனைக்கு இடமில்லை. தெற்கு வடக்கு என்ற வேறுபாடில்லை. அதில் மனித குலத்தின் அடிப்படை உரித்தே முக்கியமானதாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் அனைவரும் மனித நேயத்துடன் தங்களுக்கேற்றவாறு அஞ்சலி செலுத்துவதே உயர்ந்த பண்பும் நாகரிகமும் ஆகும். எனவே இன்றுள்ள சூழ்நிலைகளை மதிப்பிட்டு எந்த சன்னதங்களுக்கும் இடங்கொடுக்காமல் அமைதியான முறையில் கோவில்களில், வீடுகளில் நீர்நிலைகளில், நினைவிடங்களில் அஞ்சலி செலுத்துமாறும் ஈமக்கடனை நிறைவேற்றுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், தமிழ் மக்களுடைய விடுதலைக்காக ஆயிரமாயிரம் பேர் போராடினார்கள். அவ்வாறு போராடி உயிரிழந்தவர்களை நினைவுகூர வேண்டிய வரலாற்றுக் கடமை எமக்கு உண்டு. இவ்வாறு எம்மவர்கள் நினைவுகூரப்படுவதை எந்த சட்டத் தாலும் தடுத்துவிட முடியாது. ஒவ்வொரு தமிழனும் விடுதலை போரில் உயிரிழந்த உயிர்களை நினைவு நாளில் நினைவுகூர வேண்டும் என அவர் தெரிவித்தார்.