இந்திய மீனவர்கள் மீது தாக்குதலா? மோடியிடம் முறைப்பாடு
மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக உறுப்பினர்கள் பிரதமர் மோடியை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்து மனு கொடுத்ததாக இந்திய ஊடக செய்திகளில் கூறப்பட்டுள்ளன.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக இந்திய ஊடக செய்திகள் கூறுகின்றன.
இதனையடுத்து மீனவர் பிரச்சினை தொடர்பாகவும், கச்சத்தீவை மீட்கவும் பிரதமர் மோடியிடம் அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பாக வலியுறுத்துகிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
எங்களது மீனவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதியாக உள்ளார்.
சமீபத்தில் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் மீனவர்கள் தாக்கப்பட கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் அதையும் மீறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளதாக அதிமுக உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
அதேவேளை இவ்வாறு இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதற்கான தகவல்கள் இல்லை என்று இந்திய வௌியுறவுத்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் இலங்கை கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவியிடம் வினவிய போது, இந்திய மீனவர்கள் மீது கடற்படை தாக்குதல் நடத்தவில்லை என்றும், அத்து மீறும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும் கூறினார்.








