Breaking News

அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கவில்லை – பிரதமர்



முன்னைய ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை, தற்போதைய அரசாங்கம் சீனாவுக்கு விற்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா பிரதமர்,

“அம்பாந்தோட்டை துறைமுகத்தையோ, மத்தல விமான நிலையத்தையோ சீனாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ அரசாங்கம் விற்கப் போவதில்லை. அவ்வாறான செய்திகள் அடிப்படையற்றவை.

இவை முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கே வழங்கப்படவுள்ளன. துறைமுகத்தை விற்க முடியாது. விற்கமாட்டோம்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு 1.2 பில்லியன் ரூபாவுக்கு குத்தகைக்கு வழங்கி, கடனை அடைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அதேவேளை, மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதற்கு சீன, அரேபிய, அமெரிக்க நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன.

இரண்டு சீமெந்து ஆலைகள், இரண்டு இயற்கை எரிவாயு திட்டங்கள், உள்ளிட்ட பல திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்தார்.