Breaking News

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்?: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

அமெரிக்கா உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருப்பதால் அந்த நாட்டின் தேர்தல் உலகம் முழுவதும் உற்று நோக்கப்படுகிறது.

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். ஒவ்வொரு லீப் வருடத்தின் நவம்பர் மாதம் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்கிழமை அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது.

தற்போதைய அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவதை அடுத்து இன்று அங்கு தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவில் ஜனநாய கட்சி, குடியரசு கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. இந்த 2 கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் அடுத்தடுத்து அதிபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர சுதந்திர கட்சி சார்பில் ஹேரிஜான்சன், பசுமை கட்சி சார்பில் ஜில்ஸ்டீன், அரசியல் சட்ட கட்சி சார்பில் டேரல் ஹேஸ்ட்ல், சுயேச்சையாக இவான் மேக்முலின் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

ஆனாலும் ஹிலாரி கிளிண்டன்- டொனால்டு டிரம்ப் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மொத்தம் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் ஓட்டு போடுகிறார்கள். அங்கு முன்கூட்டியே ஓட்டு போடும் முறை உள்ளது. அதன்படி 4 கோடி பேர் ஏற்கனவே ஓட்டு போட்டு விட்டனர். மற்றவர்கள் இன்று ஓட்டு போடுகிறார்கள்.

மற்ற நாடுகளை போல ஒரே நேரத்தில் அங்கு வாக்குப்பதிவு தொடங்குவது இல்லை. அங்கு மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரம் ஒவ்வொரு மாகாணத்துக்கும் மாறுபடும்.

முதலாவதாக காம்சையரில் உள்ள டிக்சிவெல் நாட்ச் என்ற இடத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு 12 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் தான் முதலில் வாக்களித்தனர். அதன்பிறகு மற்ற பகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு மொத்த நேரமும் ஒவ்வொரு மாகாணத்திலும் வித்தியாசப்படும். வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அங்கு ஓட்டு போடும் முறையும் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு மாதிரி கடைபிடிக்கப்படுகிறது. பழங்கால ஓட்டு சீட்டு முறை, தபால் மூலம் ஓட்டு அனுப்பும் முறை, ஓட்டு எந்திரம் முறை ஆகியவையும் கடைபிடிக்கப்படுகின்றன.

3 மாகாணத்தில் தபால் மூலம் ஓட்டு அனுப்பும் முறை, 18 மாகாணத்தில் ஓட்டு சீட்டு மூலம் ஓட்டளிக்கும் முறை உள்ளது. பல மாகாணங்களில் ஓட்டு சீட்டு முறை, ஓட்டு எந்திரம் முறை ஆகிய இரண்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சில மாகாணங்களில் ஓட்டு எந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் என்றாலும் மக்கள் நேரிடையாக அதிபருக்கு ஓட்டு போடுவது இல்லை. அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அனைத்து மாகாணங்களிலும் அதிபர் வேட்பாளருக்கான பிரதிநிதிகள் ஒருவர் நிறுத்தப்படுவார். அவருக்கு தான் மக்கள் நேரடியாக ஓட்டு போட வேண்டும். அந்த பிரதிநிதிகள் ஓட்டு போட்டு அதிபரை தேர்வு செய்வார்கள்.

அதன்படி 50 மாகாணங்களிலும் மற்றும் தலைநகரம் வாஷிங்டனை சேர்த்து 538 பிரதிநிதிகள் உள்ளனர். இதில் 270 ஓட்டுகளை யார் பெறுகிறார்களோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

538 பிரதிநிதிகளும் தன்னிச்சையாக ஓட்டு போடுவதற்கு அதிகாரம் கிடையாது. ஒரு மாகாணத்தில் எந்த ஒரு அதிபர் வேட்பாளருக்கு அதிக ஓட்டுகள் கிடைத்திருக்கிறதோ, அந்த வேட்பாளருக்கே அந்த மாகாணத்தின் ஓட்டு மொத்த பிரதிநிதிகள் ஒட்டுகளும் அளிக்கப்படும்.

ஒரு சில மாகாணங்களில் மட்டும் ஓட்டு விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதிகள் ஓட்டளிக்க உரிமை அளிக்கப்படுகிறது.

ஒருவேளை இருவருமே 269 வாக்குகள் பெற்று சம நிலையில் இருந்தால் அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபையில் உள்ள உறுப்பினர்கள் ஓட்டு போட்டு அதிபரை தேர்வு செய்யலாம். அதிலும் சமநிலை ஏற்பட்டால் செனட்சபை உறுப்பினர்கள் ஓட்டு போட்டு அதிபரை தேர்வு செய்வார்கள்.

யாருக்கு அதிக பிரதிநிதிகள் கிடைத்துள்ளார்கள் என்பது தெரிந்ததுமே வெற்றி பெற்றவர் யார் என்பது தெரிந்து விடும். ஆனாலும் டிசம்பர் 19-ந்தேதி தான் பிரதிநிதிகள் கூடி முறைப்படி அதிபரை தேர்வு செய்வார்கள்.

அதிபர் தேர்வுடன் துணை அதிபர் தேர்வும் நடைபெறுகிறது. இதே பிரதிநிதிகள் தான் துணை அதிபரையும் தேர்வு செய்வார்கள். துணை அதிபருக்கு ஜனநாயக கட்சி சார்பில் டிம்கைனே, குடியரசு கட்சி சார்பில் மைக்பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதிபர் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று தொடர்ந்து கருத்து கணிப்பு வந்தபடியே உள்ளன. ஆரம்பத்தில் இருந்தே ஹிலாரி கிளிண்டன் இதில் முன்னணியில் இருந்தார். ஆனால் இடையில் அவர் மீது இ-மெயில் பிரச்சினை கிளப்பப்பட்டது. இதனால் அவருக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது.

ஒரு தடவை நடந்த கருத்து கணிப்பில் ஹிலாரியை, டொனால்டு டிரம்ப் முந்தினார். இந்த நிலையில் ஹிலாரி மீது இதில் குற்றமில்லை என அமெரிக்க புலனாய்வுதுறை அறிவித்துள்ளது. இதனால் ஹிலாரிக்கு மீண்டும் செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது. 

தற்போது கடைசி கட்ட கருத்து கணிப்புகள் வெளிவந்துள்ளன. யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்ற அடிப்படையில் 10-க்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள், நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அந்த கருத்து கணிப்புகளை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஹிலாரிக்கு 46.2 சதவீதமும், டொனால்டு டிரம்புக்கு 43.7 சதவீதமும் ஆதரவு உள்ளது.

லாஸ்ஏஞ்சல்ஸ் டைம்ஸ் மற்றும் யூ.எஸ்.சி. டிரேக்கிங் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் மட்டும் டொனால்டு டிரம்புக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி டிரம்புக்கு 48 சதவீதமும், ஹிலாரிக்கு 43 சதவீதமும் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கருத்து கணிப்புகளுமே ஹிலாரிக்கு சாதகமாகவே இருக்கின்றன.

யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று பொதுவாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 68 சதவீதம் பேர் ஹிலாரிக்கும், 32 சதவீதம் பேர் டிரம்புக்கும் வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.