மாவீரர்களை நினைவு கூரவேண்டாம்! - சுவாமிநாதன் புது விளக்கம்
யுத்தத்தினால் உயிர்நீத்த உறவுகளை மாவீரர் என்ற பெயரில் அஞ்சலிப்பதால் தற்போதைய நல்லிணக்க முயற்சிகளே பாதிக்கும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
எனவே உயிர்நீத்த உறவுகளை மாவீரர் என்ற பெயரில் நினைவுகூராமல் அவர்களை அஞ்சலிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
சேர் பொன்னம்பலம் இராமநாதனின் 165ஆவது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு தென்னிலங்கையின் காலி நகரில் எதிர்வரும் 30ஆம் திகதி விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் முற்பகல் கொழும்பிலுள்ள மீள்குடியேற்ற அமைச்சில் நடைபெற்றது. இதில் சேர் பொன்னம்பலம் இராமநாதனின் பேரனும், மீள்குடியேற்ற அமைச்சருமான சுவாமிநாதனுடன் தென்மாகாண ஆளுநர் ஹேமக்குமார நாணயக்காரவும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது மாவீரர் தின அஞ்சலிப்பு தொடர்பாக தென்னிலங்கையிலும், தமிழர் தாயகப் பகுதிகளிலும் பல்வேறு தரப்பினரால் நேர் எதிர் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ஊடகவியலாளர்கள் இன்றைய தினம் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் வினவினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன், மாவீரர்களை நினைவுகூர்வதால் தமிழ் – சிங்கள மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுவரும் நல்லிணக்கம் பாதித்துவிடும். எனவே உயிர்நீத்த உறவுகளை மாவீரர் என்ற பெயரில் நினைவுகூராமல் அவர்களை அஞ்சலிப்பதே சிறந்தது என்று தெரிவித்தார்.








