Breaking News

சுமனரத்ன தேரருக்கு எதிராக கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்



வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அத்துமீறி பெளத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை மற்றும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இன துவேசமாக நடந்து கொண்டமை தொடர்பாக இன்றைய தினம் வட மாகாண சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட மாகாணசபையின் 66ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள மாகாணசபை கட்டடத்தில் அவைத் தலைவர் சீ.வி கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமனது.

இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அத்துமீறி பெளத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை மற்றும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் இன துவேசமான செயற்பாடுகள் குறித்தும் தமது கண்டனத்தை தெரிவித்த வடக்கு மாகாணசபை பிரேரணையையும் நிறைவேற்றியது.

மேலும் இந்த விடயங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ் மாஅதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டத்திற்கு முரணான வகையில் அமைக்கப்படும் கட்டடங்களை இடித்து அழிக்கும் அதிகாரம் மாகாண உள்ளூராட்சி அமைச்சுக்கு உள்ளது என சுட்டிக்காட்டிய மாகணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், இந்த விடயம் தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சட்டத்திற்கு முரணான வகையில் பெளத்த விகாரை அமைக்கப்படுகின்றமை தொடர்பாவோ அல்லது, காணி அபகரிப்பு தொடர்பாகவோ மாகாணசபை எந்தவொரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையென சபையில் கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், குற்றம்சாட்டினார்.