Breaking News

தராகி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!



மறைந்த ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் மாலை 3 மணிக்கு கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பாரதி ஸ்ரார் மண்டபத்தில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வட.மாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் தெற்கு ஊடக அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் ‘தராகியும் இலங்கையின் பூகோள அரசியலும்’ என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக ஊடகக்கற்கை கலைப்பீட இணைப்பாளர் கலாநிதி எஸ்.ரகுராம் நினைவுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் சிவராம்’ என்னும் தலைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் உரையாற்றினார்.

அத்துடன் யாழ்.ஊடக அமையத்தினால் வழங்கப்பட்ட சிவராம் ஞாபகார்த்த விருது மறைந்த கேலிச்சித்திர கலைஞன் அஸ்வின் சுதர்சனுக்கு யாழ்.ஊடக அமையத்தினால் முதல் தடவையாக வழங்கப்பட்டது.

அண்மையில் இக்கட்டான காலப்பகுதியில் ஊடகப் பணியாற்றியமைக்காக சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் 7 பேர், ஊடக அமையத்தினாலும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கான விருதுகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழங்கி கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.