வித்தியா விவகாரம்: அரசு தரப்பு சாட்சி இன்று - THAMILKINGDOM வித்தியா விவகாரம்: அரசு தரப்பு சாட்சி இன்று - THAMILKINGDOM
 • Latest News

  வித்தியா விவகாரம்: அரசு தரப்பு சாட்சி இன்று  புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பில், அரசு தரப்பு சாட்சி இன்று (வியாழக்கிழமை) மன்றில் சாட்சியமளிக்கவுள்ளார்.

  வழக்கின் 11ஆவது சந்தேகநபரான உதயசூரியன் சுரேஸ்கரன் அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ள நிலையில், இன்றைய தினம் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இவர் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவுள்ளார்.

  குறித்த சந்தேகநபருக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு காரணமாக அவர் யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

  வித்தியா கொலை வழக்கின் சாட்சியப்பதிவு யாழ். மேல் நீதிமன்றத்தின் மூன்றாவது கட்டடத் தொகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில், ட்ரயல் அட் பார் தீர்ப்பாய முறையில் நேற்று ஆரம்பமாகியது.

  நேற்றைய சாட்சியப்பதிவில் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா முன்னிலையாகி, வழக்கின் முக்கிய விடயங்களை சாட்சியமாக பதிவுசெய்திருந்தார்.

  அதனைத் தொடர்ந்து வித்தியாவின் தாயாரும் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார். நேற்றைய சாட்சியப்பதிவானது சுமார் 8 மணித்தியாலங்கள் நடைபெற்றது.

  இதன்போது, ஏற்கனவே சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பகிர்வு பத்திரத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென பதில் சட்டமா அதிபர் கோரியமைக்கு அமைவாக, புதிதாக 12 சாட்சியாளர்கள் அறிவிக்கப்பட்டதோடு, புதிதாக 5 சான்றுப் பொருட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், இச் சாட்சியப்பதிவில் மொத்தம் 49 சாட்சியாளர்களிடம் சாட்சியப்பதிவு இடம்பெறவுள்ளது.

  இவர்களின் 35ஆவது சாட்சியாளர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவருக்கு நேற்றைய தினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

  அத்தோடு, வழக்கின் பிறிதொரு சாட்சியாளர் தனது மகளின் திருமணத்திற்காக இந்தியாவுக்கு செல்வதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில், நேற்றைய தினம் அவர் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டதோடு, எதிர்வரும் ஜூலை மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

  குறித்த சாட்சியப்பதிவு நாளைய தினமும் நடைபெறவுள்ளதோடு, அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  யாழ்.புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா, கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட் 12 பேரில் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ளார். ஏனைய 9 பேருக்கும் எதிராக 41 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வித்தியா விவகாரம்: அரசு தரப்பு சாட்சி இன்று Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top