Breaking News

ஆள வந்தான்: யாருக்கும் அடிமை இல்லை: யாருக்கும் அரசன் இல்லை

6 வயதில் அரி­தாரம் பூசி களத்தூர் கண்­ணம்­மாவில் கள­மி­றங்கி 50 ஆண்­டுகள் தாண்டி சினி­மாவை ஆளும் கமல்­ஹாசன் இன்று அரி­தாரம் பூசாமல் அர­சி­யல்­வாதி எனும் புதிய அவ­தாரம் எடுத்­துள்ளார்.

மர­பணு மாற்­றப்­பட்ட பூ, பிளாஸ்டிப் பூ என்­றெல்லாம் தொடர் விமர்­ச­னங்கள் வந்­த­போ­திலும் எதையும் காதில் போட்டு கொள்­ளாமல் நான் பூ அல்ல விதை. விதைத்த பின் பாருங்கள். தடை­களை தாண்டி சரித்­திரம் படைப்போம் என்று மது­ரையில் மக்கள் நீதி மய்யம் எனும் கட்­சியை தொடங்கி அர­சி­யலில் கள­மி­றங்­கி­ விட்டார். ஆனாலும் கமல் விஷ பரீட்­சையில் இறங்­கு­வ­தா­கவும் ஜெய­ல­லிதா இருந்தபோது இருந்த இடம் தெரி­யாது வாய் திறக்­கா­மல் ­இ­ருந்­தவர். விஸ்­வ­ரூப பிரச்­சி­னையின் போது நாட்டை விட்டு ெவளியே­றுவேன் என்று கண்ணீர் விட்­டவர் இப்­போது பேசு­கின்றார். இது சினிமா அல்ல அர­சியல் என்று கம­லுக்கு எதி­ரான விமர்­ச­னங்கள் தொடர்ந்து கொண்­டே­யி­ருக்­கி­றது. ஆனால் தன்னை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு பதில் கூறி நேரத்தை வீண­டிப்­பதை விட செயலில் இறங்கி சாதிப்போம். என் கட்­சியில் எல்­லோரும் சமமே. நான் யாருக்கும் அர­ச­னில்லை.

யாருக்கும் அடி­மை­யில்லை என்ற தனக்­காக எழுதப்பட்ட பாடல் நிதர்ச­ன­மா­னது என்­பது போல இங்கு தலைவன் இல்லை. தலை­வர்­கள் நீங்கள் தான் என மக்­களை கைகாட்­டிய கமல் இறுதி மூச்சு உள்ள வரை உங்­க­ளுக்­கா­கவே எனது வாழ்க்கை என உருக்­கத்­துடன் முழங்­கி­யுள்ளார். அதற்­கி­ணங்க 6 கிரா­மங்­களை தத்­தெ­டுத்து அதனை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகளை முன்­னெ­டுத்து வரு­கின்ற விடயம் பாராட்­டத்­தக்­கதே. வெறும் பேச்சு என்­பதை விட செயல் என்று செயற்­பட தொடங்­கி ­விட்டார். இப்­போது தமி­ழக மக்­களின் பார்வை கமலை நோக்கி ஈர்க்­க­ப்பட்டு விட்­டது.

தமி­ழக அர­சியல் என்­பது ஜெய­ல­லி­தாவின் மறைவு மற்றும் கரு­ணா­நி­தியின் மூப்பு கார­ண­மான ஓய்வால் துடிப்பு இல்­லாத படகு போல தத்­த­ளித்­து கொண்­டி­ருக்­கி­றது. மக்­க­ளுக்கு யாரை நம்­பு­வது யாருக்கு வாக்­க­ளிப்­பது என்று கூட தெரி­ய­வில்லை. ஜெய­ல­லி­தாவின் சொந்த தொகு­தியில் இரட்டை இலை தோற்­றதும் தி.மு.க. படு­தோல்­வியை சந்­தித்­த­துமே இதற்கு நல்ல சான்று. இந் ­நி­லையில் சினிமா மோகம் என்­பது தமிழ்­நாட்டை பொருத்த வரையில் தவிர்க்க முடி­யாத ஒன்று அங்கு சினி­மாவும் அர­சி­யலும் ஒன்­றர கலந்­தவை . இதனால் தான் இப்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தற்கு ரஜினி கமல் விஜய் அஜித் உள்­ளிட்ட சினி­மாவின் உச்ச நட்­சத்­தி­ரங்­களின் ரசி­கர்கள் தங்­க­ளது கதா­நா­ய­கர்­களை அர­சி­ய­லுக்கு வரு­மாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர். 

இந்­ நி­லையில் 20 வரு­டங்­க­ளுக்கு மேலாக ரஜி­னிக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. 1996 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்­துக்கே கார­ண­மாக இருந்­தது ரஜி­னியின் குரல் தான். அப்­போது நினைத்­தி­ருந்தால் அவர் முதல்­வ­ராக கூட ஆகி­யி­ருக்­கலாம். ஏனெனில் ரஜி­னிக்கு அப்­படி ஒரு மக்கள் செல்­வாக்கு அப்­போது இருந்­தது. அவர் யாரை கை காட்­டு­கி­றாரோ அவரே முதல்வர் என்ற நிலை உரு­வா­னது. ஆனால், ''வரும் போது வருவேன் வருவேன் என்று கூறிய அவர் கிட்­டத்­தட்ட 20 வரு­டங்­களின் பின்னர் இப்­போது "நான் அர­சி­ய­லுக்கு வந்­துட்டேன்... போர் வந்தால் பார்த்து ­கொள்வோம்" என்று அறி­வித்து தனது கட்­சியை கட்­ட­மைப்­ப­தற்­கான பணி­களை மேற்­கொண்டு வரு­கின்றார்.

ஆனால், ரஜினி போல கமல் இல்லை. அவர் அர­சி­யலில் நேர­டி­யாக எந்த கருத்­தையும் வைத்­தில்லை. சினி­மா­வுக்கு நடிப்­புக்கு என்றே பிறந்­த­வ­ராக கலைக்கு இலக்­க­ண­மாக மாறி­யவர் கமல். நடிகர் தில­கத்தின் கலை வாரி­சாக மட்­டுமே கமல் இது­வரை பார்க்­கப்­பட்டார். கம­லின் ஒவ்­வொரு படமும் வெவ்­வே­றா­ன­தாக இருக்கும். சினி­மாவில் அவ­தாரம் எடுப்­பதில் அவ­ருக்கு நிகர் அவர் ­மட்­டுமே. தமி­ழகம், இந்­தியா தாண்டி உல­கமே கமலை உலக நாய­க­னாக நிரந்­தர இளை­ஞ­னாக கொண்­டா­டு­கி­றது.

விஸ்வரூ­பம் என்ற திரைப்­ப­டத்தை கமல் எடுத்த போது அதனை ெவளியிடு­வதில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டன. அப்­போது ஜெய­ல­லிதா முதல்­வ­ராக இருந்தார். அவரை எதிர்த்து அர­சியல் செய்­வது சிம்ம சொப்­பனம் போன்­றது. அது கரு­ணா­நி­தியால் மட்­டுமே முடிந்­தது. அந்த காலத்தில் கமல் தனக்கு ஏற்­பட்ட அழு­த்தத்­தினால் நாட்டை விட்டு ெவளியே­றுவேன் என்று பகி­ரங்­க­மாக ஊட­கங்­க­ளிடம் தெரி­வித்தார் அதுவும் கண்ணீர் வடித்து கொண்டே. ஆனால், அந்த திரைப்­படம் ெவளியா­னது. அப்­போது இருந்தே அவ­ருக்கு அ.தி.மு.க. மீது ஒரு மனக்­க­சப்பு இருந்த போதும் அவர் அதனை ெவளிக்காட்­டி­ய­தில்லை.

ஜெய­ல­லிதா மறைந்த பின்னர் கரு­ணா­நி­தியும் சுக­யீ­னமுற்று செய­லி­ழந்து விட்டார். இந்த சந்­தர்ப்பத்தில் சசி­கலா முதல்­வ­ராக முயற்­சித்­தமை, கூவத்தூர் கூத்து, தின­கரன் வென்­றமை, ஓ.பி.எஸ்.ஸின் தர்­ம ­யுத்தம் பா.ஜ.க.வின் கைப்­பொம்­மை­யாக அரச நிர்­வாகம் மாறி­யமை. தமி­ழ­கத்­துக்கு நன்மை பயக்­காத மக்கள் எதிர்ப்பு தெரி­விக்­கின்ற திட்­டங்கள் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றமை. அமைச்­சர்­களின் செயற்­ தி­ற­னற்ற செயற்­பா­டுகள் என்­பன கார­ண­மாக ஆளும் அ.தி.மு.க. மீதான வெறுப்பு எல்­லோ­ருக்கும் ஏற்­பட்­டு ­விட்­டது.

இந்த சந்­தர்ப்­பத்தில் கமல் தொடர்ந்து டுவிட்­டரில் தமி­ழக அரசை விமர்­சித்து எழு­திக் ­கொண்டே வந்தார். நேர­டி­யாக பேட்­டி­களும் தந்தார். மேடை­களில் தோன்றி துணிச்­ச­லாக அரசின் நிர்­வா­கத்தை விமர்­சனம் செய்தார். பிக்பொஸ் நிகழ்ச்­சியில் அர­சியல் குறித்து பல்­வேறு கருத்­துக்­களை கமல் கூறி­யது சர்ச்­சைக்­குள்­ளா­னது. வார இதழ்­க­ளிலும் சமூகம் சார்ந்து அர­சியல் நிலைகள் சார்ந்து, வாசிப்­புகள் சார்ந்து தனது புரி­தல்கள் எவ்­வாறு உள்­ளன, மாற்­றங்­களை எப்­படி செய்ய முடியும் என்­ப­தை­யெல்லாம் வெளிப்­ப­டுத்தும் வித­மாக கேள்வி பதில்கள், தொடர் கட்­டு­ரைகள் என எழு­தினார்.

தமி­ழக அரசின் நிர்­வா­கத்தை தொடர்ந்து அவர் விமர்­சிப்­பதும் அதற்கு அமைச்­சர்கள் பதி­ல­ளிப்­பதும் பதி­லுக்கு கமல் ஒன்று சொல்­வ­து­மென கடந்த சில மாதங்­க­ளா­கவே ஊட­கங்­களில் தலைப்புச்ெசய்­தி­யானார் கமல். அனிதா மரணம், ஆர்.கே. நகர் தேர்தல் என மக்கள் உணர்­வதை துணிச்­ச­லாக சொல்ல தொடங்­கினார். தமி­ழக அர­சி­யலில் ஊழல் நடப்­ப­தாக அவர் கூறிய கருத்­துகளுக்கு அமைச்­சர்கள் நிரூ­பிக்­கு­மாறு சவால்­ விட்­டனர். உடனே கமல் மக்­க­ளிடம் ஒரு கோரிக்கை வைத்தார். 

அதா­வது ஊழலால் பாதிக்­கப்­பட்ட மக்கள் அது ­தொ­டர்பில் துறை சார்ந்த அமைச்­ச­ரிடம் தெரி­வி­யுங்கள், கேளுங்கள் என்று அமைச்­சர்­களின் இணைய முக­வ­ரி­களை பகி­ரங்­க­மாக தனது இணைய பக்­கத்தில் ெவளியிட்டார். ஆனால் சற்று நேரத்தில் அமைச்­சர்கள் தங்­க­ளது இணைய முக­வரி மற்றும் தொலை­பே­சி ­இ­லக்­கங்கள் என்­ப­ன­வற்றை அழித்­து ­விட்­டனர். கொஸ்­லந்தை ஆற்றில் கழி­வுகள் கொட்­டப்­பட்­டதை விமர்­சித்த கமல் ஓர் அதி­கா­லையில் யாரும் எதிர்­பா­ராது நேர­டி­யாக அங்கு சென்று ஆய்வு செய்தார். இப்­படி கமலின் அர­சியல் ஆட்டம் மறை­மு­க­மாக தொடங்­கி­யது.

இத­னி­டையே நீங்கள் அர­சி­ய­லுக்கு வரு­வீர்­களா என்று கம­லிடம் முன்­வைக்­கப்­பட்ட கேள்­விக்கு நான் எப்­போதோ வந்­து­விட்டேன் என்று அவர் பதி­லளித்தார்.

அண்­மையில் நியூயோர்க் ஹாவார்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய உடை­யான வேட்டி சட்­டையில் தோன்­றிய கமல், ''கடந்த 37 ஆண்­டு­க­ளாக நான் அர­சி­யலில் இருந்து வரு­கிறேன். காந்தி, பெரியார் போல நேரடி அர­சி­யலில் ஈடு­பட வேண்டாம் என நினைத்­தி­ருந்தேன். ஆனால், தற்­போது நேரடி அர­சி­யலில் ஈடு­பட வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது என நினைக்­கிறேன்.'' என்று பேசி­ய ­போது தமி­ழ­கத்தின் முக்­கிய அர­சியல் தலை­வர்­களும் திரும்பிப் பார்க்கத் தொடங்­கினர். ''அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு'' என்று கூறி­ய ­போது அவ­ரது அர­சியல் பயணம் உறு­தி­யா­னது.

''திரா­விடம் என்­பது கட்­சி­களை சார்ந்­த­தல்ல. அது தேசிய அள­வி­லா­னது. நான் சைவம் அல்ல. மாட்­டுக்­கறி சாப்­பிட மாட்டேன். அதற்­காக மற்­ற­வர்­களை மாட்­டுக்­கறி சாப்­பிடக் கூடாது எனவும் சொல்ல மாட்டேன். மக்கள் இதைத்தான் சாப்­பிட வேண்டும் என அரசு சொல்­லக் ­கூ­டாது'' என்ற அவ­ரு­டைய பேச்சு அவ­ரது சமூக பார்வை, புரி­தல்கள் மீதான நம்­பிக்­கைக்கு அவரே பாதை அமைத்து தரு­வதை பார்க்­க­மு­டிந்­தது.

வெறு­மனே பேச்­சாக மட்­டு­மில்­லாமல் அமெரிக்காவில் சில விஞ்­ஞா­னி­க­ளையும் சந்­தித்தார் கமல். தமி­ழ­கத்தில் மக்கள் தங்­க­ளுக்கு தேவை­யான மின்­சாரம் தாங்­களே தயா­ரித்­து கொள்­வ­தற்­கான முன்­னே­றி­ வரும் விஞ்­ஞான சாத்­தி­யங்­களை அறிய விஞ்­ஞா­னி­க­ளிடம் அவர் கலந்­து­ரை­யா­டினார்.

அனைத்­திலும் வித்­தி­யா­ச­மாக புது­மையை செய்யும் கமல் தனது கட்­சியின் பெய­ரையும் புது­மை­யா­கவே அறிவித்தார். "மக்கள் நீதி மய்யம்" அதா­வது யாரையும் சாராமல் யாரையும் வெறுக்­காமல் நடு­ப்புள்­ளியில் இருப்பதே இதன் பொருள். இது புது­மை­யா­னதாக உள்ள போதிலும் தமி­ழக அர­சியலில் இது சாத்­தி­யமா என்­பது கேள்விக்குறியே...

அது­மட்டும் அல்ல தான் கற்­றுக்­கொள்­ள ­வேண்­டிய அனு­பவ பாடங்­க­ளுக்­காக தி.மு.க. தலைவர் மு.கரு­ணா­நிதி, இந்­திய கம்­யூனிஸ்ட் கட்­சியின் மூத்த தலைவர் ஆர்.நல்­ல­கண்ணு, தே.மு.தி.க. தலைவர் விஜ­யகாந்த், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் என பல­ரையும் சந்­தித்து பேசு­கிறார். எல்­லா­வற்­றிற்கும் மேலாக ஊழ­லுக்கு எதி­ரான இயக்­கத்தை தொடங்கி இளை­ஞர்­களின் நம்­பிக்­கையை பெற்று ஆட்­சியை பிடித்த டில்லி முதல்வர் கெஜ்­ரி­வாலை அழைத்து அவர் முன்­னி­லை­யி­லேயே தனது புதிய கட்­சியை தொடங்­கி­யுள்ளார். இது ேமாடிக்கு எதி­ரான அர­சி­ய­லாக பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

ஏனெனில் தமி­ழ­கத்­துக்குள் எப்­ப­டி­யா­வது பா.ஜ.க. கால் ஊன்­றி ­வி­ட ­வேண்­டு­மென துடிக்­கி­றது. இந்­ நி­லையில் ரஜி­னியும் கமலும் பா.ஜ.க.வின் கைக்­கூ­லிகள் என்று விமர்­ச­னங்கள் எழுந்தன. இந் ­நி­லையில் மோடி அர­சுக்கு எதி­ரி­யான கெஜ்­ரி­வாலை அழைத்து வந்து கட்­சியை தொடங்­கி­யுள்ளார். ஊழல் இல்­லாத ஆட்சி என்­பது கமலின் எதிர்­பார்ப்பு. இது சாத்­தி­யப்­ப­டுமா. சினி­மாவில் தான் சம்­பா­தித்­ததை சினி­மா­வுக்கே செல­விட்ட கலைஞன் கமல் மட்­டுமே. அவர் தனக்­கென்ற எதையும் வைப்­ப­தில்லை. 

தமிழ் சினி­மாவை உலக தரத்­துக்கு மாற்ற உழைத்து பணம் அனைத்­தையும் சினி­மா­வுக்கே திருப்பி கொடுத்­தவர். இது அர­சி­யலில் சாத்­தி­ய­மா­குமா.. கமலின் அருகில் உள்ள அனை­வ­ருமே கமலை போல இருப்­பார்­களா பதவி மோகம் பணத்­தாசை இல்­லாத மக்கள் சேவகர்­க­ளாக எப்­போதும் இருப்­பார்­களா... என்று தெரி­யாது. ஆனால் கமல் "இங்கு அனைத்­துமே மக்­க­ளிடம் தான் இங்கு நான் முதல்வன். நீ முதல்வன் அல்ல. மக்களே முதல்­வர்கள்" என்று கூறி ­விட்டார்.

அவ­ரது மய்யம் இணையத்தளம் இப்­படி சொல்­கி­றது, ''70 ஆண்டு சுதந்­தி­ரத்­திற்கு பின்னும், இன்­றைய ஒழுங்­கற்ற அர­சி­ய­லினால், தமிழ்­நாடு மாற்­றத்தை வேண்டி நிற்­கி­றது. எனவே, நாம் நமக்­காக செய­லாற்ற வேண்­டிய தருணம் இது. மாநி­லத்தில் மாற்­றத்தை உரு­வாக்கும் சக்தி உங்கள் கைகளில் இருக்­கி­றது. மேம்­பட்ட எதிர்­கா­லத்­திற்­காக, வள­மான தமி­ழ­கத்­திற்­காக நாம் ஒன்­று­பட்டு உழைப்போம் . ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே!

ஆனால், அண்ணா, கரு­ணா­நிதி, எம்.­ஜி.ஆர், ஜெய­ல­லிதா என மிகப்­பெ­ரிய இயக்க பின்­புலம் கொண்டவர்களாலேயே தங்கள் அமைப்­பு­களில் தூய்­மையை நேர்­மையை கடைப்­பி­டிக்க இய­லாத நிலையை தமி­ழகம் காண ­நேர்ந்­தது. மேலும் சினிமாவிலிருந்து வந்த நடி­கர்­ தி­லகம் சிவா­ஜி­யையே மக்கள் தோற்­க­டிக்­கத் ­தானே செய்­தார்கள். பாக்­கி­யராஜ், டி.ராஜேந்தர், சரத்­குமார் என பலரும் அர­சி­ய­லுக்கு வந்து கண்­டது என்ன?'' என்று ேகள்வி எழும்புகிறது.

ஆனால், கமலின் கட்சி முன்­னெ­டுப்பு செயல்­களில் இவர்­க­ளி­ட­மி­ருந்து முற்­றிலும் மாறு­பட்ட தன்­மையை பார்க்­க ­மு­டி­கி­றது. நானே செய்வேன். நானே சாதிக்க போகிறேன் என்று அவர் சொல்­ல­வில்லை. தமி­ழகம் மாற வேண்டும் என்று சிந்­திக்கும் இளை­ஞர்­க­ளோடு அவர் கைகோர்க்க விரும்­பு­கிறார். அவர் தனது அர­சியல் பய­ணத்தை இரா­மேஸ்­வ­ரத்தில் தொடங்­கிய போது மீன­வர்­க­ளு­ட­னான சந்­திப்பில் அவர்­களின் பிரச்­சி­னை­களை கேட்­ட­றிந்தார். அப்­போது தனக்கு பொன்­னாடை போர்த்தும் வழக்கம் இல்லை. அதனால் தன்­னையே போர்த்­து­வ­தாக கூறி மீன­வர்­களை கட்­டி­ய­ணைத்து கொண்டார். 

இங்கு மீனவ நண்­ப­னான முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினை­வுக்கு வரு­கிறார். அதைப்போலவே 'நாளை நமதே' என்ற எம்.ஜி.ஆரின் படத்­த­லைப்­பி­லேயே தனது அர­சியல் பய­ணத்­தையும் ஆரம்­பித்­துள்ளார். எம்.ஜி.ஆரை விடுத்து தமி­ழக அர­சி­யலை பார்க்க முடி­யாது என்­ப­தையே இது சுட்­டிக்­காட்டு­கின்­றது. கமலின் மக்கள் நீதி மய்யம் . சிறிய விதை போன்­றது தான். இது எந்த மாதி­ரி­யான விருட்­ச­மாக வள­ர­வேண்­டு­மென மக்­கள் தான் தீர்­மா­னிக்க போகின்­றார்கள். அது புதிய அவ­தாரமாக விஸ்­வ­ரூபம் எடுக்­குமா? அல்­லது புஸ்­வா­ன­மா­கி ­போ­குமா என்­ப­தெல்லாம் பொறுத்­தி­ருந்­து தான் பார்க்­க­ வேண்டும்.

கமல் வயதை வைத்து யாரும் கிண்டல் செய்ய முடி­யாது. அது கூடாது. ஏனெனில் 100 வயதை தொடப்­போகும் தி.மு.க. தலை­வ­ருக்கே அர­சியல் ஆசை இருக்கும் போது கம­லுக்கு இருக்கக் கூடாதா... கமல் என்றும் இளை­ஞர் தான்.. ஆள­வந்தான் ஆண்­டு தான் பார்க்­கட்­டுமே..

மேலும், தமிழ்­நாட்டை பொறுத்­த­வ­ரையில் திரைத்­து­றையில் இருந்து அர­சி­ய­லுக்கு வரு­வது ஒன்றும் புதி­தல்ல என்­றாலும், தற்­போது கமல்­ஹா­சனும், ரஜி­னி­காந்தும் அர­சியல் களத்தில் இறங்­கி­யுள்ள காலம் தான் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. ஆனால், இரு­வரும் ஒரே நேரத்தில் தனித்தனியாக கள­மி­றங்­கு­வது மக்­களின் மனதில் குழப்­பத்தை நிச்­சயம் ஏற்­ப­டுத்தும்.

மேலும், ரஜினி இன்னும் கட்­சியை அறி­விக்­க­வில்லை. கமல் தனது அரசியல் ஆட்­டத்தை ஆரம்­பித்து விட்டார். அகிலம் போற்றும் அணு­விஞ்­ஞா­னியும் குடி­ய­ரசு தலை­வ­ரு­மான அப்துல் கலாமின் இல்­லத்­தி­லி­ருந்து ... அதுவும் இர­ாமேஸ்­வரம் எனும் புண்ணிய பூமி­யி­லி­ருந்து தொடங்­கி ­விட்­டது கமலின் அர­சியல் ஆட்டம். அது மது­ரையை அதி­ர ­வைத்­தது போல தொடர்ந்து தமி­ழக அர­சி­யலில் அதி­ரடி காட்­டுமா..

இதேவேளை, அவ­ரது தனிப்­பட்ட சொந்த வாழ்க்­கையை நாம் விமர்­சிக்கக் கூடாது. பொது வாழ்க்­கையில் ஏற்­க­னவே தனது கமல் நற்­பணி மன்றம் மூல­மாக பல்­வேறு மக்கள் நல செயற்­பா­டு­களை செய்­துள்ளார். உடல் தானம், இரத்ததானம் என்­பன கூட அவரும் அவ­ரது ரசி­கர்­களும் செய்­துள்­ளனர். அது மட்டும் அல்ல அவ­ரது ரசி­கர்­களை கமல் எப்போதும் கட்டுப்பாட்டுடனேயே வைத்திருப்பார். அதனை மதுரை பொதுக்கூட்டத்தில் காண முடிந்தது. 

அவர் இராமேஸ்வரத்திலிருந்து மதுரை வரை தனது அரசியல் பயணத்தை தொடங்கிய போது கூட பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படுத் தவில்லை. அன்றாட மக்கள் கடமைகள் எதற்கும் அவர்கள் தடை விதிக்கவில்லை. கமல் தனிப்பட்ட ரீதியில் நல்ல மனிதர் தான் அதனால் தான் எமக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி கிடைத்தார். கமல் நினைத்திருந்தால் ரஜினியை வளர விடாமல் ஒரு இரண்டாம் நிலை கதாநாயகனுக்கான அந்தஸ்திலேயே வைத்திருந்திருக்கலாம். ஆனால், கமல் அப்படி செய்யவில்லை. ரஜினி சூப்பர் ஸ்டார் ஆகும் வாய்ப்பை அளித்தவரே கமல் என்பதில் மறுப்பில்லை.

கட்சி தொடக்க விழாவில் "நான் உங்கள் வீட்டு குத்துவிளக்கு என்னை ஏற்றி வைத்து பாதுகாத்தால் ஒளி தருவேன். வாக்கிற்கு பணம் கொடுக்க மாட்டேன். குவாட்ரும், ஸ்கூட்டரும் தரமுடியாது. அதனை மற்றவர்களுக்கு நீங்கள் வழங்கும்படி உங்களது வாழ்க்கையை தரமேற்றுவேன்" என அதிரடியாக கூறிவிட்டார். இதனை தமிழக மக்கள் ஏற்பரா... ஜெயலலிதா தொகுதியிலேயே அ.தி.மு.க.வையும் இரட்டை இலையையும் தோற்கடித்த மக்கள் ... பணம் வாங்காமல் கொள்கைக்காக கமலை ஆதரிப்பார்களா.... சினிமாவில் பல விஸ்வரூபம் எடுத்து ஆண்டவர்.. அரசியலை ஆள்வாரா .....முதல்வராக விஸ்வரூபம் எடுப்பாரா...

உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு உலக நாயகனே கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐ.நா.வும் உன்னை அழைக்கும் என உண்மையிலே தமிழனை கமல் பெருமை கொள்ள வைப்பாரா... அதற்கு தமிழக மக்கள் துணை நிற்பரா என பொறுத்திருந்து பார்ப்போம்...

குமார் சுகுணா