Breaking News

ஆஸ்திரேலியாவில் அகதிகளை விடுவிக்கக்கோரி தொடர்ந்து பல போராட்டங்கள்!

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகளை விடுவிக்கக்கோரி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள தொடர்ந்து பல போராட்டங்கள் நடைபெற்று உள்ளன. 

அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்
கும் கங்காரு பாய்ண்ட் ஹோட்டல் நோக்கி ஊர்வலம் செல்வதற்கு முன்பாக 1000த்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கூடியதால் பிரிஸ்பேன் நகரின் முக்கிய சாலை முடங்கும் நிலை ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள், பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தடுப்பிற்கு மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“இப்போராட்டம் அகதிகளை சமூகத்திற்குள் விடுவிக்கக்கோரி நடைபெறுகிறது. அகதிகள் சாசனத்தின் கீழ் அவர்களை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த வேண்டும்,” எனக் கூறியுள்ளார் பசுமைக்கட்சியைச் சேர்ந்த பிரிஸ்பேன் நகர கவுன்சிலர் Jonathan Sri. “இதில் பெரும்பாலானவர்கள் உண்மையான அகதிகள்… அதிலும் பெரும்பாலானோர் மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரப்பட்டவர்கள்,” எனக் கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியா கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உடல்/ மன நலம் பாதிக்கப்பட்ட அகதிகள், மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். இவர்கள் மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இச்சட்டம் ஆளும் லிபரல் கூட்டணி அரசாங்கத்தால் சில மாதங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டிருந்தது. 

இந்த ஹோட்டலில் 100க்கும் மேற்பட்டவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக கூறும் குடிவரவுத்துறை அமைச்சர் அலன் டஜ், லேபர் கட்சியின் மருத்துவ வெளியேற்றச் சட்டத்தால் இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

“பப்பு நியூ கினியா? அல்லது நவுருவில் குடியமருவதா என்பதை (சம்பந்தப்பட்ட) அகதிகள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அகதி அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் அவர்கள் தாய்நாட்டிற்கு திரும்பலாம், அல்லது அமெரிக்கா மீள்குடியமருவதற்கான வாய்ப்பு இருந்தால் அங்கு செல்லலாம்,” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

பப்பு நியூ கினியா, நவுரு ஆகிய தீவு நாடுகளில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற நூற்றுக்கணக்கான அகதிகள் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ளனர். இந்த அகதிகள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்தப்படமாட்டார்கள் என்பது ஆஸ்திரேலியாவின் நிலைப்பாடாக இருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.