Breaking News

இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகை எவ்வளவு தெரியுமா?


 இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (24) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இலங்கைக்கு “கடன் நிவாரணப் பொதியை” வழங்குவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் சுமார் 29 பில்லியன் டொலர்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வது இது இரண்டாவது தடவையாகும்.

இன்று ஆரம்பமான கலந்துரையாடலின் பின்னர் இருதரப்புக்கும் இடையில் ஊழியர்கள் மட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து ஓரளவு நிவாரணம் பெற சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மூன்று பில்லியன் டொலர்களை எதிர்பார்க்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் அதன் அதிகாரிகள் மற்றும் நாட்டின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஆலோசகர்களான "Lazard´s மற்றும் Clifford பிரதிநிதிகளுடனும் Chance" கலந்துரையாட உள்ளனர்.

இலங்கை செலுத்த வேண்டிய இருதரப்புக் கடனின் அளவு சுமார் 9.6 பில்லியன் டொலர்கள் மற்றும் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மற்றும் தனியார் கடன்களின் தொகை 19.8 பில்லியன் டொலர்கள் என நிதி அமைச்சின் தரவுகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இலங்கை தனது இருதரப்பு கடனில் பெரும்பகுதியை ஜப்பானுக்கும் சீனாவுக்கும் செலுத்த வேண்டியுள்ளது.

இதில், சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன் 3.5 பில்லியன் டொலர்கள் என்பதுடன், அவர்களிடமிருந்து பெறப்பட்ட வர்த்தகக் கடன்களையும் சேர்த்துப் பார்க்கும் போது, ​​இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் ஐந்தில் ஒரு பங்கு சீனாவிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.