Breaking News

கூட்டமைப்பின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு இன்று

ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கா அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கூட்டமைப்பின் இந்த முடிவு இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.கொழும்பு, ஹெவலொக் டவுன், ஜானகி ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் தலைமையில் நடைபெறவுள்ள விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகும்.

இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவுள்ள இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு?' என்ற கேள்விக்கான பதிலை தென்னிலங்கை சமூகமும் சர்வதேச சமூகமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.

அதேவேளை, தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபாலவும், அரச தரப்பின் வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை எதிர்பார்த்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சையின் நிமித்தம் புதுடில்லியில் நீண்ட நாள்கள் தங்கியிருந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. நேற்று முன்தினம் கொழும்பு வந்த கையோடு தனது கொழும்பு இல்லத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை நடத்தினார்.இதன்போது பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடினார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த வாரங்களில் வடக்கு, கிழக்கில் நடத்திய மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட ஒருமித்த கருத்துகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேற்படிக் கூட்டத்தின் இறுதியில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவை  இன்று நடைபெறும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. உத்தியோகபூர்வமாக அறிவிப்பார். 

 இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கமைய தமிழ் மக்கள் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது