Breaking News

மைத்திரிபால சிறிசேனவை சரத் பொன்சேகாவுடன் ஒப்பிடலாமா?


தென்னிலங்கை முழுவதிலும் ஜனாதிபதித் தேர்தல்
பிரசாரம் தடல்புடலாக நடந்து வருகிறது. வடக்கு கிழக்கு மாகாண மக்கள் இனத்தால் மட்டுமன்றி தேர்தல் பிரசாரத்திலும் சிறுபான்மையினர் என்பது காட்டப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மக்களும் தம்மளவில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஏதேவொரு முடிவை எடுப்பர்.

அந்த முடிவு மிகச்சிறந்த முடிவாக இருக்கும் என்பதிலும் ஐயமில்லை. நிலைமை இதுவாகவிருக்க, தேர்தல் பிரசாரம் கடும் சூடு பிடித்துள்ள வேளையில் வெற்றி யாருக்கு என்ற விவாதம், பிரதிவாதங்கள் நாடு பூராகவும் நடந்து கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக அரச திணைக்களங்கள், பொது அமைப்புகளில் பணிபுரிவோர் தமது ஓய்வு நேரத்தை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி யாருக்கு என்ற விவாத அரங்கை ஆரம்பித்து அதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர்.

இவையயல்லாம் தேர்தல் காலங்களில் நடக்கக் கூடியவை ஆயினும், எதிர்வரும் 8-ம் திகதி நடக்கப் போகும் தேர்தல் முடிவு இந்த நாட்டில் பலத்த மாற்றங்களைச் செய்யும் என்பதால் அது தொடர்பான மக்கள் கருத்து முன்னெப்போதும் இல்லாதவாறு விறுவிறுப்படைந்துள்ளது. இவை ஒருபுறமிருக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்­வை எதிர்த்து போட்டியிட்டவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

தேர்தல் பிரசாரம் நடந்த போது, வெற்றி சரத்பொன் சேகாவுக்கே என்று கூறப்பட்டது. சரத் பொன்சேகா வெற்றியடையக்கூடிய வாய்ப்புகள் உண்டென்ற ஆதாரமற்ற கணிப்பை நம்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவையே ஆதரிக்கும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பு சரத் பொன்சேகாவுக்கு வெற்றியைத் தவிர; சிறைவாசம், பட்டம் பறிப்பு என்ற மிகப்பெரும் துன்பங்களை வருடக்கணக்கில் கொடுத்திருந்தது. அதுமட்டுமன்றி இனிமேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுக்குமளவில் அவர் மனத்தைரியத்தையும் இழந்தார்.

இன்னொரு தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால்... என்று நினைக்கும் போதெல்லாம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிந்து, பெறுபேறுகள் வெளியான போது, தனக்கு நடந்ததை அவர் நினைத்துப் பார்ப்பார். அந்த நினைவு இன்று விட்டன் கொண்டலடி என்பதாக இருந்திருக்கும்.

இவை ஒருபுறமிருக்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றி என்ற விடயத்தில் மைத்திரிபால சிறிசேனாவை சரத் பொன்சேகாவுடன் ஒப்பிட்டு கருத்துரைப்பது சரியானதா? என்று கேட்டால் இல்லவே இல்லை என்பதே நம் பதிலாக அமையும். சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தவர். அரசியல் என்பது அவருக்கு அப்பாற்பட்டது.

அதே நேரம் அவரை தேர்தலுக்கு அழைத்து வந்தவர்கள் அவரின் வெற்றிக்காகப் பாடுபடவில்லை. அதே சமயம் இராணுவத் தளபதியாக இருந்த ஒருவரை ஜனாதிபதி ஆக்கினால் ஜனநாயகம் படாப்பாடு படுமோ என்ற ஏக்கமும் தென்பகுதி மக்களிடம் ஏற்பட, சம்பந்தர் ஐயாவும்! பொறுத்த நேரத்தில் அதனைத் தெரிவிக்க, சரத் பொன்சேகாவின் வெற்றி தவிடு பொடியாகிற்று.

ஆனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்­வை எதிர்த்துப் போட்டியிடுபவர் மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செய லாளராக இருந்தவர். அரசியலில் மிகுந்த அனுபவம் . இது மட்டுமன்றி ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதை மிக இரகசியமாக மறைத்து வைத்திருந்தவர்.

இதுதவிர முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தீவிரமான ஆதரவுக்குரியவர். எனவே நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாருக்கென்பதை நிறுத்திட்டமாக கூறமுடியா விட்டாலும், தேர்தல் முடிவில் சரத் பொன்சேகாவுடன் மைத்திரிபால சிறிசேனவை ஒப்பிடுவது எந்த வகையிலும் பொருத்தமற்றது.

சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது பெளத்திரமாக இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மைத்திரிபால போட்டியிடும் போது இரண் டாக உடைந்துபோயிற்று என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.