மீண்டும் மஹிந்த ஆட்சி அமைத்தால் தமிழர்களின் நிலை என்ன? - THAMILKINGDOM மீண்டும் மஹிந்த ஆட்சி அமைத்தால் தமிழர்களின் நிலை என்ன? - THAMILKINGDOM
 • Latest News

  மீண்டும் மஹிந்த ஆட்சி அமைத்தால் தமிழர்களின் நிலை என்ன?

  இன்று இலங்கையில் நடைபெற இருக்கின்ற தேர்தலானது வரலாற்றிலேயே மிகவும் அதிக பணத்தை பயன்படுத்தி நடத்தப்படும் தேர்தல் என பல விமர்சனங்களும், எதிர்ப்புக்களும் ஆளும் மற்றும் எதிர் கட்சிகளுக்கிடையில் உருவாகியுள்ளதை அனைவராலும் அவதானிக்க முடிகின்றது.


  அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது ஆதரவு எதிர் அணி பொது வேட்பாளர் மைத்திரிக்கு என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது தமிழ் மக்களுக்கு எந்த விதத்தில் நன்மை அளிக்கப் போகின்றது என்பதை திரு.சம்பந்தன் அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவு வழங்குவதாக இவர்கள் யாரிடம் கேட்டு முடிவெடுத்தார்கள்.

  மைத்திரியை ஆதரிப்பதற்கான காரணம் என்ன? வேட்பாளர்களுடைய விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்குரிய நிரந்தர தீர்வு பற்றி ஏதாவது குறிப்பிட்டுள்ளாரா அவரா? என்பது பற்றி மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.பெரும்பாலும் ஜனவரி 1ஆம் திகதி 12 மணிக்கு பின் அமையப் போவது இராணுவ ஆட்சி என்பதே இன்றைய நிலைப்பாடாக உள்ளதை யாவரும் அறிவோம்.

  இந்த தேர்தலில் பதவியை தக்க வைப்பதற்கு மஹிந்த என்ன வேண்டுமென்றாலும் செய்யும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளது . குறைந்தது இந்த முடிவின் பிரகாரம் எம்மை பொறுத்த வரையில் மைத்திரியிடம் மிகுதியாக அடகு வைத்துள்ள தமிழ் மக்களின் உயிர்களுக்காவது உத்தரவாதம் தருவாரா? அல்லது மைத்திரி இது குறித்து எழுத்து மூலமான ஒப்பந்தங்களை செய்துக்கொடுத்துள்ளாரா? என்பதை சம்பந்தன் தெளிவுப்படுத்த வேண்டும்.

  இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகளுக்கு ஒட்டு மொத்த பொறுப்பினையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் .இல்லை என்றால் தமிழர்களின் நிலை பாரிய கேள்விக் குறியாக மாறும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளது என்பதே உண்மை.

  1952 இல் சிங்கக்கொடியையும்,1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தையும், கிழக்கில் தமிழ் நிலப்பறிப்பையும், 1958 இல் எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலையையும்,1962 இல் வடகிழக்கெங்கும் எம்மீது ஸ்ரீலங்கா படைகளை ஏவிவிட்டதையும், எமது இளைஞர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்டதையும், எம்மவருக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டதையும்,1977இல் எம்மீது இன்னொரு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதையும், எம்மவரை அல்லும் பகலும் துன்புறுத்தி பல்லாயிரக்கணக்கான எமது மக்களை சித்திரவதைக்கூடங்களில் அடைத்திட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் எம்மீது ஏவப்பட்டதையும்,1983 ல் எமது மக்கள் பயங்கரமான இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டதையும், ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் வியத்தகுவகையில் ஆங்கிலம் பொறி பறக்கப்பேசிய எமது அந்நாள் தலைவர்களால் எந்த வகையிலாவது தடுத்திடமுடிந்ததா? அவர்களுடைய அற்புதபேச்சுக்களை ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் கேட்டு சிங்கள தலைவர்கள் மனந்திருந்தி தமது பிழைகளை உணர்ந்து நடந்ததாக ஏதாவது வரலாறு உண்டா? இல்லவே இல்லை.

  பயங்கரவாதத் தடைச்சட்டம் மிக அநீதியானது. உலகிலேயே மோசமாக கருதப்படுகின்ற சட்டமிது என்றெல்லாம் நாம் நாடாளுமன்றிற்கு தெரிவு செய்து அனுப்பிய சட்டவல்லுநர்கள் பக்குவமாகவும் நுட்பமாகவும் எடுத்துரைத்து பார்த்தார்கள். அசைந்தார்களா சிங்களத்தின் தலைவர்கள்? இம்மியளவும் இல்லை.

  தன் அரசியல் அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு மஹிந்தவுக்கு இன்னொரு வழியுண்டு. இதையும் அவர் செய்யத் தயங்கமாட்டார் என எண்ணுகிறேன். 1982 இல் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார் (86 ஆவது பிரிவின் கீழ்) ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் தனது ஆயுட்காலத்தை மேலும் ஏழு ஆண்டுகளுக்கு நீடிக்கலாமா? என்பதே அவர் நடத்திய சர்வஜன வாக்கெடுப்பின் முக்கிய கேள்வியாகும்.

  இதில் அவருக்கு வெற்றி கிட்டியது. இதன் காரணமாக 1982 இல் கலைய வேண்டிய ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் 1989 ஆம் ஆண்டுவரை நீடித்தார். அதுபோல மஹிந்தவும் தனது பதவிக்காலத்தை இன்னும் பல ஆண்டுகள் நீடிக்க மக்கள் ஆணை கோரி ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்தவும் வழியுண்டு.

  இவையெல்லாவற்றையும் விட ஸ்ரீலங்காவிற்கு ஒரு புதிய அரசியல் யாப்பை ஏற்படுத்துவதற்கான ஆணையைக் கேட்டு மஹிந்த ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்தலாம். ஆனாலும் இப்படிச் செய்வது ஸ்ரீலங்கா சட்டத்திற்கு முரணானது. அதில் வெற்றி பெற்று அதனடிப்படையில் ஒரு அரசியல் நிர்ணய சபையை உருவாக்கி அதன் மூலம் ஒரு புதிய அரசியல் யாப்பை தயாரித்து அவர் தன்னை இலங்கையின் ஆயுட்கால பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ நியமித்துக் கொள்ளலாம்.

  தேர்தல் அறிவித்தாலும் பதவியில் இருப்பதற்கு எதையும் செய்யத் தயாராகவே இருக்கிறார் மஹிந்த என்பது இன்றைய நிலைமை.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மீண்டும் மஹிந்த ஆட்சி அமைத்தால் தமிழர்களின் நிலை என்ன? Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top