100 நாள் வேலைத்திட்டத்திக்கு ஒத்துழைப்பு இல்லை - வாசுதேவ
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு எவ்விதமான ஒத்துழைப்பையும் வழங்கப் போவதில்லை என தெரிவித்த முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் தனது கட்சி ஏனைய இடது சாரி கட்சிகளுடன் இணைந்து தனியான எதிர்த்தரப்பாக இயங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில் புதிய அரசியல் கட்சி எதனையும் நான் ஆரம்பிக்கவில்லை. எமது கட்சி ஜனநாயக இடது சாரி முன்னணியாகும் அது தொடர்ந்து இயங்கும்.
புதிய ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம்.ஏனென்றால் முதலாளித்துவ மேற்கத்தேய கொள்கையுடைய ஐ.தே.கட்சியுடனேயே ஜனாதிபதி உடன்பாடு கொண்டுள்ளார். எனவே இதற்கு ஒரு போதும் உடன்பட முடியாது.
அதேவேளை பாராளுமன்றத்தில் எமது கட்சி, சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் இடது சாரி கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் தனித்து சுயாதீனமாக செயற்படும். இது தொடர்பாக சபாநாயகருக்கு எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளோம்.
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால பொறுப்பேற்றுள்ளார்.எனவே எதிர்வரும் 3 மாதங்களுக்கு பின்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் போது தற்போதைய ஐ.தே. கட்சியுடனான கூட்டரசாங்கத்தில் முரண்பாடுகள் தலைதூக்கும்.
எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ள நிமால் சிறிபால டி சில்வா ஜனாதிபதியுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதை எதிர்க்கவில்லை. ஆனால் ஐ. தே. கட்சியுடனான உடன்பாட்டிலிருந்து ஜனாதிபதி வெளியே வர வேண்டும்.அவ்வாறானதொரு நிலையிலேயே உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட வேண்டும். அந்த சூழ்நிலையில் நாம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவோம் என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார்.








